எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு அதிகம் பீகாரில் சாதனை ஓட்டுப்பதிவு யாருக்கு சாதகம்? தேஜஸ்வி யாதவ் ஆதரவு அலையா? ஆளும் பாஜ கூட்டணிக்கு ஆபத்தா?
பாட்னா: பீகார் சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்குப்பதிவு பதிவு செய்துள்ளது. முதற்கட்ட தேர்தல் நடந்த 121 தொகுதிகளில் வாக்களிக்கும் தகுதியுடைய 3.75 கோடி வாக்காளர்களில் 64.66 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை வாக்குச் சாவடிகளில் பதிவு செய்தனர். இது பீகார் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை ஆகும். 1951-52 ஆம் ஆண்டு நடந்த முதல் பீகார் சட்டப்பேரவை தேர்தலின் போது, வரலாற்றில் மிகக் குறைந்த அளவாக 42.6 சதவீதம் பதிவாக இருந்தது. அதிகபட்சமாக 2000 ஆம் ஆண்டு 62.57 சதவீத வாக்குகள் பதிவாகின. 2020ஆம் ஆண்டு தேர்தலில் 57.29 சதவீதம் பதிவாகி இருந்தது. மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக 1998ல் 64.6 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
இந்த அதீத வாக்குப்பதிவு, ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலையைக் குறிப்பதாக இருக்கலாம் என எதிர்க்கட்சிகள் உற்சாகத்தில் உள்ளன. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு அரசு வேலை என்ற எதிர்க்கட்சிகளின் வாக்குறுதி, இந்த வாக்குப்பதிவு உயர்வுக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த 2015 மற்றும் 2020 தேர்தல்களில் வாக்குப்பதிவு சதவீதம் சற்று அதிகரித்தபோதெல்லாம், ஆளும் கூட்டணியில் மாற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், தேர்தலுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியில், பீகார் முழுவதும் சுமார் 68 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் தாண்டி முதற்கட்ட வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 2020 தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு 56.2 சதவீதமாக இருந்தது. இந்த திடீர் எழுச்சி தேஜஸ்வி யாதவ் ஆதரவு அலை என்றும், ஆளும் பா.ஜ கூட்டணிக்கு ஆபத்து என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதிக வாக்குப்பதிவு எப்போதும் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் எனக் கூற முடியாது. சமீபத்தில் நடந்த சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு அதிகரித்தபோதும், ஆளும் பாஜவே மீண்டும் வெற்றி பெற்றது. வாக்கு எண்ணிக்கை 14ம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது இந்த வரலாறு காணாத வாக்குப்பதிவு யாருக்கு சாதகம் என்பது தெரியவரும்.
* பா.ஜ எம்பியை சந்தித்த லாலுவின் மூத்த மகன்
பீகாரில் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு ஜனசக்தி ஜனதாதளம் பெயரில் தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் தனியாக போட்டியிடும் லாலுவின் மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ் நேற்று பாட்னா ஏர்போர்ட்டில் பா.ஜ எம்பி ரவி கிஷனைசந்தித்து பேசினார். இதுபற்றி தேஜ்பிரதாப் கூறுகையில்,’ நான் ரவி கிஷனை முதல் முறையாகச் சந்திக்கிறேன். சிவபெருமானின் பக்தியைப் பொறுத்தவரை அவரும் நானும் ஒரே பக்கத்தில் இருக்கிறோம். நாங்கள் இருவரும் எங்கள் நெற்றியில் திலகம் அணிந்திருக்கிறோம்’ என்றார்.
* எங்கள் மீது மக்களின் நம்பிக்கையால் அதிக ஓட்டுப்பதிவு: மோடி
பீகார் மக்கள் மோடி மற்றும் நிதிஷின் ஆட்சிக் காலத்தில் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதற்கு சான்றாகத்தான் முதற்கட்ட தேர்தலில் அதிக வாக்குப்பதிவு நடந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,’இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் அதே வேளையில், வரவிருக்கும் தோல்விக்கு சாக்குப்போக்குகளைத் தேடுவதில் காங்கிரஸ் இப்போது இருந்தே மும்முரமாக உள்ளது. ஏனெனில் பீகார் வாக்காளர்கள் அனைத்து சாதனைகளையும் முறியடித்தனர். பீகார் வரலாற்றில் இதற்கு முன் ஒருபோதும் இவ்வளவு அதிக வாக்குப்பதிவு சதவீதம் இருந்ததில்லை. வாக்குப்பதிவை கிட்டத்தட்ட 65 சதவீதமாக உயர்த்த அதிக எண்ணிக்கையில் வந்த தாய்மார்கள் மற்றும் சகோதரிகளான தாய் சக்திக்கு பெரும் பாராட்டு சேரும். மோடி-நிதிஷ் கூட்டணியின் சாதனைப் பதிவு மீது அவர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. எதிர்க்கட்சியின் பொய்யான வாக்குறுதிகளால் அவர்கள் ஏமாறவில்லை. கூட்டணியில் இருந்தும், காங்கிரஸ் கூட, ஆர்ஜேடியின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நம்பவில்லை’ என்றார்.
* ‘தேஜஸ்வியின் விருப்பமான முதல்வர் மு.க ஸ்டாலின்’
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பீகார் மாநிலம் பாகல்பூர் பேரணியில் பேசும் போது,’லாலுவின் மகனும் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவிடம் உங்களுக்குப் பிடித்த முதல்வர் யார்? என்று கேட்டதற்கு தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் மு.க. ஸ்டாலின் தான் அவருக்குப் பிடித்தவர் என்று அவர் பதிலளித்தார். அவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். அவரது கட்சி பீகாரியை ‘பீடி’களுடன் ஒப்பிடுகிறது. அவரது கட்சி பீகாரியை அவமதித்து அவமானப்படுத்துகிறது. தேஜஸ்விக்கு மிகவும் பிடித்தவர் இந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்’ என்று பேசினார்.
* மோடியால் கார்கே தாமதம்
பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள செனாரி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் கார்கேவின் பிரசாரம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தாமதமானது. இதுபற்றி கார்கே கூறுகையில்,’நான் சரியான நேரத்தில் சென்றிருப்பேன், ஆனால் விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் மோடியின் விமானம் புறப்படும் வரை காத்திருக்க வேண்டும் என்று என்னிடம் கூறினர். எனவே நான் எனது ஹெலிகாப்டருக்குள் சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது’ என்று குற்றம் சாட்டினார்.
* லாலு கட்சி வேட்பாளர் மீது வழக்கு
பீகார் மாநிலம் பாட்னாவின் மானர் தொகுதியின் லாலுபிரசாத் கட்சி வேட்பாளர் பாய் வீரேந்திரா, வாக்குச் சாவடியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் பணியாளர்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
* மோடி பொய் சொல்ல தயங்குவதில்லை:கார்கே
பீகார் மாநிலம் செனாரி தொகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் கார்கே,’ மோடி பொய் சொல்லத் தயங்குவதில்லை; அவரது நண்பர் அமித் ஷாவும் அவரைப் போன்றவர். காங்கிரசிடமிருந்து முதல்வர் வேட்பாளர் பதவியை லாலு கட்சி மிரட்டி திருடிவிட்டதாக மோடி கூறினார். ஆனால் உண்மையான திருடன் பாஜ தான். மோடி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 2 கோடி கொடுப்பதாகச் சொன்னார். செய்தாரா? இல்லை. ஏழைகளுக்கு 1 கோடி வீடுகள் கொடுப்பதாகச் சொன்னார். செய்தாரா? இல்லை’ என்றார்.
* இது மாற்றத்திற்கான வாக்குப்பதிவு: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் கூறுகையில்,’ சத் பண்டிகைகளுக்காக பீகார் திரும்பிய புலம்பெயர்ந்தோர் உள்ளிட்டோரால் தான் அதிக வாக்குப்பதிவு பதிவாகி உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு அதிகபட்ச வாக்குப்பதிவு, பீகாரில் மாற்றத்திற்கான மிகவும் வலுவான ஏக்கம் என்பதை காட்டுகிறது. பீகார் மக்கள் சுமார் 30 ஆண்டுகளாக அரசியல் குழப்பத்தில் சிக்கித் தவிக்கின்றனர்’ என்றார்.
* இது ஆட்சிக்கு ஆதரவான வாக்கு: தர்மேந்திர பிரதான்
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில்,’ பீகாரில் வரலாற்று வாக்குப்பதிவு ஆட்சிக்கு ஆதரவான வாக்கு. இது ஆளும் கூட்டணிக்கு எச்சரிக்கை மணி என்ற எதிர்க்கட்சிகளின் கருத்து பொய்யாகும். சமீப காலங்களில், மக்கள் அதிக எண்ணிக்கையில் பதவியில் இருக்கும் பிரதமருக்கு வாக்களிக்க வந்த பல நிகழ்வுகள் நடந்துள்ளன. பீகாரிலும் இதேதான் நடக்கிறது, இங்கு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை இமயமலையைப் போல உறுதியாகவும் உயர்ந்ததாகவும் உள்ளது’ என்றார்.
* 2 துணை முதல்வர்கள் உள்பட அனைவரும் தோற்பார்கள்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில்,’ அதிக வாக்குப்பதிவு ஆளும் கூட்டணிக்கு ஆபத்து. 2 துணை முதல்வர்கள் உள்பட முதற்கட்ட தேர்தலை எதிர்கொண்ட 15 அமைச்சர்களும் தோற்பார்கள்’ என்றார்.
* 2 கைவிரல்களிலும் மை பீகார் எம்.பி. 2 ஓட்டு போட்டாரா?
பீகார் மாநிலத்தை சேர்ந்த லோக்ஜனசக்தி(ராம்விலாஸ்) கட்சி எம்பி ஷாம்பவி சவுத்ரி நேற்று முன்தினம் வாக்களித்த பிறகு 2 விரல்களில் மை இருந்ததை காட்டினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பாட்னாவில் உள்ள புத்தாகாலனி செயின்ட் பால் பள்ளியில் அமைந்த பூத்தில் தனது தந்தையும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் அசோக்சவுத்திரி, தாயார் நீதா சவுத்திா ஆகியோருடன் ஓட்டு போட்டார். அப்போது எம்பி ஷாம்பவி சவுத்திரி முதலில் தனது வலது கையை உயர்த்தி மை தடவிய விரலைக் காட்டினார். பின்னர் விரைவாக இடது கையை காட்டினார். அதிலும் மை அடையாளம் இருந்தது. பின்னர் எந்த விரலை காட்ட வேண்டும் என்று கேட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் 2 ஓட்டு போட்டதாக வைரலாக பரவியது. காங்கிரஸ் கட்சி இதை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கேள்வி எழுப்பியது.
இதுபற்றி ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் காஞ்சனா யாதவ் தனது எக்ஸ் பதிவில்,’ இது முற்றிலும் புதிய அளவிலான மோசடி. இது எல்ஜேபி எம்பி ஷாம்பவி சவுத்ரி. அவர் இரண்டு கைகளிலும் மை வைத்திருக்கிறார், அதாவது அவர் இரண்டு முறை வாக்களித்தார். இது வெளிச்சத்திற்கு வந்தபோது, அவரது தந்தை அசோக் சவுத்ரி தனது கண்களால் அவருக்கு சமிக்ஞை செய்வதைக் காண முடிந்தது. தேர்தல் ஆணையமே, இது எப்படி நடக்கிறது? இதை யார் விசாரிப்பார்கள்?’ என்று கேள்வி எழுப்பினார். இந்த வைரலான வீடியோ குறித்து ஷாம்பவி சவுத்ரியோ அல்லது இந்திய தேர்தல் ஆணையமோ எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

