பீகாரில் தோற்பதை அறிந்ததும் 1,050 ஏக்கர் விவசாய நிலத்தை அதானிக்கு பரிசளித்தது பாஜ: காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
புதுடெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று அக்கட்சியின் ஊடக மற்றும் விளம்பர பிரிவு தலைவர் பவன் கேரா அளித்த பேட்டியில் கூறியதாவது: பீகாரில் உள்ள பாகல்பூரின் பிர்பைன்டியில், 10 லட்சம் மரங்களும் 1,050 ஏக்கர் நிலமும் நாட்டின் வளமான தொழிலதிபர் கவுதம் அதானிக்கு ஆண்டுக்கு 1 ரூபாய் கட்டணத்தில் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக 33 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று பீகார் வரும் நிலையில், அங்குள்ள கிராம மக்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களால் போராட்டம் நடத்த முடியவில்லை.
இதற்கு முன், மகாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற்றபோது, மின் உற்பத்தி நிலைய திட்டமும் தாராவி மறுசீரமைப்பு திட்டமும் அதானிக்கு வழங்கப்பட்டன. ஜார்க்கண்ட், சட்டீஸ்கரிலும் தேர்தலுக்கு முன்பு அதானிக்கு திட்டங்கள் வழங்கப்பட்டன. இது மிக நீண்ட பட்டியல். பாஜ தேர்தலில் தோற்று விடும் என உணரும் போதெல்லாம், அதானிக்கு முன்கூட்டி பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், தான் பீகாரில் தற்போது 1,050 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, இங்கு ரூ.21,400 கோடியில் 2,400 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் இத்திட்டத்தை அரசே செயல்படுத்துவதாக கூறியிருந்த நிலையில், பின்னர் இது அதானியிடம் தாரை வார்க்கப்பட்டு விட்டது. பீகார் நிலத்தில் கட்டப்படும் இந்த மின் நிலையம், மாநிலத்தின் பணத்தில், மாநிலத்தில் நிலக்கரியில் மின்சாரம் தயாரித்து அதை பீகார் மக்களுக்கு ஒரு யூனிட் ரூ.6.75க்கு விற்கப் போகிறது. இது இரட்டை கொள்ளை. விவசாயிகள் தங்கள் தாயாக கருதும் விவசாய நிலங்களை வெறும் 1 ரூபாய்க்கு மதிப்பிட்டுள்ளனர். இந்த நிலத்தை அபகரிக்க விவசாயிகளை மிரட்டி, பென்சிலால் கையெழுத்திட கட்டாயப்படுத்தினர். இப்படி நிலம் வாங்கி அமைக்கப்படும் உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் பீகார் மக்களுக்கு யூனிட் ரூ.6.75, ஆனால் மகாராஷ்டிரா, உபிக்கு ரூ.3 முதல் ரூ.4 வரை தர இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.