நேபாளம், வங்கதேசம், மியான்மரை சேர்ந்தவர்கள் பீகார் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர்: தீவிர திருத்த பணியில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்
புதுடெல்லி: பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியின் போது, நேபாளிகள், வங்கதேசத்தினர், மியான்மரைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் கண்டறியப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளனர். பீகாரில் வரும் நவம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், கடந்த மாதம் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கியது.
இதன்படி, பீகார் முழுவதும் சுமார் 7.8 கோடி வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கி அவற்றை பூர்த்தி செய்து பெறப்பட்டு வருகின்றன. முக்கியமாக இப்பணியில் வாக்காளர்களின் குடியுரிமை சரிபார்க்கப்பட்டு வருகிறது. கடந்த 2 தினத்திற்கு முன்பு வரையிலும் 74 சதவீதம் பேர் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்து விட்டதாகவும், வரும் 25ம் தேதி இறுதி தேதிக்குள் அனைவரிடம் விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்படும் என தேர்தல் அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், பீகாரில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது ஏராளமான நேபாளம், வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளைச் சேர்ந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் நேற்று கூறி உள்ளனர். பூத் நிலை அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்ததில் இத்தகவல் கண்டறியப்பட்டதாக கூறி உள்ளனர். வரும் 25ம் தேதியுடன் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அனைத்தும் பெறப்படும்.
அதன்பிறகு ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு படிவங்களுடன் தரப்பட்ட ஆவணங்கள் மீது முறையான விசாரணை நடத்தி பின்னர் செப்டம்பர் 30ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் பெயர்கள் சேர்க்கப்படாது என அதிகாரிகள் கூறி உள்ளனர்.ஆனால் இது குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது பல்வேறு மாநிலங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் இத்தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகாரைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள அசாம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் விரைவில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்வதாக ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
* இந்தியா முழுவதும் திருத்தம் அடுத்த மாதம் ஆயத்தம்
பீகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை எதிர்த்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது அரசியலமைப்பு வழங்கிய அதிகாரம் எனக்கூறி பணியை தொடர தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து, தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நாடு முழுவதும் மேற்கொள்ள அடுத்த மாதம் முதல் தயாராகும்படி மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது.
இதன்படி மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் சிலர் தங்கள் மாநிலங்களில் நடைபெற்ற கடைசி தீவிர திருத்தத்தின் அடிப்படையிலான வாக்காளர் பட்டியலை வெளியிடத் தொடங்கி உள்ளனர். டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி இணையதளத்தில் டெல்லியில் கடைசி தீவிர திருத்தம் நடந்த 2008ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. உத்தரகாண்டில், கடைசியாக தீவிர திருத்தம் நடந்த 2006ம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.