பீகார் வாக்காளர் பட்டியல் முறைகேடு விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
டெல்லி: வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து, பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே, இதற்கு முந்தைய நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மராட்டிய மாநில தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாக அதாவது வாக்குகள் திருடப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி புகார் கூறினார். இந்த பிரச்சினைகளுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகிறார்கள்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து வருகிறது. நேற்று தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற இந்தியா கூட்டணி எம்.பிக்களை டெல்லி போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்நிலையில், டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்றும் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் பேனர்களை ஏந்தியபடி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கைவிட வலியுறுத்தினர். பின்னர் நாடாளுமன்றத்தின் அலுவல் நடவடிக்கைகளில் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.