சென்னை : பீகாரை போன்று தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் இருக்காது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாற்றில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், " 2026 தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கு இடையேதான் போட்டி இருக்கும். டிசம்பர் அல்லது ஜனவரியில் அமமுக கூட்டணி முடிவை அறிவிப்போம். பீகார் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் எதிரொலிக்காது. துரோகத்தை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் முடிவு; பழனிசாமி எங்களை சந்திக்கவே தயங்குகிறார். 2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவினர் உண்மையை உணர்வார்கள்.
நாங்கள் இடம்பெறும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், சசிகலா உள்ளிட்டோருடன் தொடர்ந்து பேசி வருகிறேன். சில கூட்டணி காட்சிகளை சேர்ந்தவர்கள் எங்களுடன் பேசி வருகிறார்கள்; ஜனவரிக்குள் கூட்டணி முடிவு தெரிவிக்கப்படும். அண்ணாமலையுடன் நட்பு ரீதியாக தொடர்பில் இருக்கிறேன். எங்களை பொறுத்தவரை துரோகத்தை வீழ்த்த வேண்டும். எளிய மக்களுக்கு வாக்காளர் திருத்த படிவத்தை நிரப்புவதில் சிரமம் உள்ளது.SIR பணிகளின்போது அனைத்துக் கட்சிகளும் கவனமுடன் செயல்பட வேண்டும். அனைத்துக்கட்சிகளும் கவனத்துடன் செயல்படும்போது தேர்தல் ஆணையத்தால் என்ன செய்ய முடியும்"இவ்வாறு தெரிவித்தார்.


