Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பீகார் முதற்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு நீண்ட இழுபறிக்கு பின் ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதி பங்கீடு: குறைந்த தொகுதியில் போட்டியிட ஆர்ஜேடி, காங்கிரஸ் சம்மதம்

பாட்னா: பீகார் முதற்கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், எதிர்க்கட்சியான ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் காட்டி வருகிறது. பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான ‘இந்தியா’ கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன்சக்தி (ராம் விலாஸ்), ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மற்றும் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா (மதச்சார்பற்ற) ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கும் தனது வேட்பாளர்களை முழுமையாக அறிவித்துள்ளது.

பாஜக தனது மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டப் பட்டியலை நேற்று முன்தினமும், ஐக்கிய ஜனதா தளம் தனது இரண்டாவது பட்டியலை நேற்றும் வெளியிட்டன. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். மறுபுறம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளை உள்ளடக்கிய ‘இந்தியா’ கூட்டணி, நேற்றிரவு தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தை எட்டியபோதிலும், இன்னும் தனது முழுமையான வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உடன்பாட்டின்படி, கடந்த 2020ம் ஆண்டு தேர்தலில் 144 இடங்களில் போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம், இம்முறை புதிய கூட்டணிக் கட்சிகளுக்கு இடமளிக்கும் வகையில், சற்று குறைவான இடங்களில் போட்டியிடும் எனத் தெரிகிறது. தேஜஸ்வி யாதவ் தனது ராகோபூர் தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். ஆரம்பத்தில் ஏற்பட்ட இழுபறிக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் போட்டியிட்ட 70 இடங்களைக் காட்டிலும் குறைவாக, 61 இடங்களில் போட்டியிட ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. கூட்டணியில் பெரும் சர்ச்சைக்குரிய புள்ளியாக இருந்த முகேஷ் சஹானி தலைமையிலான விகாஸ்ஷீல் இன்சான் கட்சிக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா ஆகியோரின் தலையீட்டிற்குப் பிறகு, சுமார் 15 இடங்கள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சிக்கு 18 இடங்களும், இதர இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே காங்கிரஸ் தனது 48 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதற்கிடையே, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து, இதுவரை 116 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இது இரண்டு முக்கியக் கூட்டணிகளுக்கும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.