Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பீகார் தேர்தலில் மனுத்தாக்கல் நிறைவு; இந்தியா கூட்டணியில் மெகா குழப்பம்: 11 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டி ஹேமந்த் சோரன் கட்சி திடீர் விலகல்

பாட்னா பீகார் சட்டப்பேரவைக்கு மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 121 தொகுதிகளில் முதற்கட்டமாக நவ 6ஆம் தேதியும், 122 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக நவ.11 ஆம் தேதியும் தேர்தல் நடக்கிறது. இங்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்), விகாஷீல் இன்சான் கட்சி ஆகியவை அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியும், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், பா.ஜ, சிராக் பஸ்வான், ஜிதன்ராம் மஞ்சி உள்ளிட்டோர் இடம் பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.

முதற்கட்ட தேர்தல் மனுத்தாக்கல் அக்.17ஆம் தேதியும், இரண்டாம் கட்ட மனுத்தாக்கல் அக்.20ஆம் தேதியும் முடிந்து விட்டது. ஆனால் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு முடியவில்லை. காங்கிரஸ் கட்சி 61 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது. இதையடுத்து லாலு தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், 143 வேட்பாளர்களை அறிவித்தது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் சிட்டிங் எம்எல்ஏக்கள் 36 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அலோக் மேத்தா, முன்னாள் அமைச்சர் சந்திரசேகர் உள்ளிட்ட 41 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், இடதுசாரிக் கட்சிகளும் (30 தொகுதிகள்), விகாஷீல் இன்சான் கட்சியும் (15 தொகுதிகள்) தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்ததால், கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் குறைந்தது 11 தொகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒன்றுக்கொன்று எதிராக ‘நட்பு ரீதியான’ போட்டியில் களமிறங்கியுள்ளன. குறிப்பாக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வைஷாலி, லால்கஞ்ச், கஹல்கான், ராஜபக், ரோசெரா ஆகிய தொகுதிகளில் மோதுகின்றன. இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பச்வாரா, ராஜ்பகாட், ரோசெரா, பீகார்ஷெரிப் ஆகிய 4 தொகுதிகளில் காங்கிரஸை எதிர்த்துக் களத்தில் உள்ளது.

‘இந்தியா’ கூட்டணியில் 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், கூட்டணித் தலைமைக் கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இதுகுறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த 6 தொகுதிகளில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்த ஜே.எம்.எம் பின்னர் பீகார் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டது. இதனால் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் மெகா குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாள். அப்போது இறுதி நிலவரம் வெளிவரும்.

லாலு மூத்த மகன் தேஜ் பிரதாப் மீது வழக்கு பதிவு

பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹுவா சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, ​​தேர்தல் நடத்தை விதிகளை (எம்.சி.சி) மீறியதாக ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத்தின் மூத்த மகனும் ஜனசக்தி ஜனதா தளத் தலைவருமான தேஜ் பிரதாப் யாதவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

1 கோடி பேருக்கு அரசு வேலை முதல்வர் நிதிஷ் அதிரடி

பீகாரில் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி அறிவித்தார். அதற்கு பதிலடியாக நேற்று பிரசாரத்தை தொடங்கி முதல்வர் நிதிஷ்குமார்,’ அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்’என தெரிவித்தார்.

இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் 3 பேர் கைது

வேட்புமனு தாக்கல் செய்த சில நிமிடங்களிலேயே, 20 ஆண்டுகள் பழமையான குற்ற வழக்கில் தொடர்புடைய இந்தியா கூட்டணியின் 3 வேட்பாளர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சசாரம் சட்டமன்றத் தொகுதியின் ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்ஜேடி) வேட்பாளரான சதேந்திர சஹா, போரே மற்றும் தரவுலி தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலைக் கட்சியைச் சேர்ந்த ஜிதேந்திர பாஸ்வான் மற்றும் சத்யதேவ் ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் அதிகாரி மீது வழக்கு

இந்தியா கூட்டணியில் உள்ள விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) கட்சிக்கு கவுரா பவுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இங்கு ஆர்ஜேடி சார்பில் அப்சல் அலி கான் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். அவரது மனுவை நிராகரிக்கும்படி கட்சி தலைவர் லாலுபிரசாத் தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்தும் அவர் நடவடிக்கை எடுக்காததால் தொகுதியின் தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3 வேட்பாளர்களை வாபஸ் பெற வைத்த பா.ஜ

பீகார் தேர்தலில் பாஜவின் அழுத்தம் காரணமாக தனது கட்சியின் 3 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியதாக ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறுகையில்,’ ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் தோல்விக்கு மிகவும் பயந்து எதிர்க்கட்சி வேட்பாளர்களை போட்டியில் இருந்து விலகுமாறு அச்சுறுத்தி வருகிறது. இதன் மூலம் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. நாட்டில் இதுபோன்ற முன்னுதாரணமே இல்லை. எனவே வேட்பாளர்களின் பாதுகாப்பை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். டானாபூர், பிரஹம்பூர் மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய தொகுதிகளில் இருந்து எங்கள் கட்சி வேட்பாளர்கள் வாபஸ் பெற வைக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம் சூரத் மாதிரியைப் பின்பற்ற பாஜ முயற்சிக்கிறது’ என்றார்.