பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. 121 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த 6-ம் தேதி நடந்த நிலையில், 11-ம் தேதி 122 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருக்கும் பீகாரில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 6-ந் தேதி நடந்தது. 121 தொகுதிகளில் நடந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் இறுதி நிலவரத்தை நேற்று தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதன்படி 65.08 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது பீகார் வரலாற்றிலேயே முதல் முறையாகும்.
பீகாரில் முதல்கட்ட சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில், 2-ம் கட்ட தேர்தல் வருகிற 11-ந் தேதி நடக்கிறது. இதற்காக உச்சக்கட்ட பிரசாரம் நடந்து வந்தது. மாநிலத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதைபோல இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.
இந்த நிலையில், பிரசாரத்தின் இறுதி நாளான இன்று தங்கள் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி, ‘இந்தியா’ கூட்டணியின் கட்சி தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்கள், வீதி வீதியாக பேரணி என தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.
தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. 11-ந்தேதி நடைபெறும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

