பாட்னா, செப்.4: பீகார் பேரவை எதிர்க்கட்சி தலைவரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் நேற்று கூறியதாவது: வாக்காளர் அதிகார யாத்திரையின் போது, பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் அவமதிக்கபவ்பட்டதாக கூறி பீகாரில் தேஜ கூட்டணி கட்சிகளின் சார்பில் பந்த் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தினால் ஒரு வாரத்துக்கு முன் யாரோ ஒருவர் அவதூறாக பேசியுள்ளார். இந்த சம்பவத்துக்கு பின் பிரதமர் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றார். வெளிநாட்டு பயணத்தை முடித்து விட்டு திரும்பிய அவர் நேற்று முன்தினம் தனது தாயார் அவமதிக்கப்பட்டதாக கூறி அழுகிறார். வெளிநாட்டில் சிரித்து கொண்டிருந்தார்.
யாருடைய தாயையும் அவதூறான வார்த்தைகளால் பேசக்கூடாது. நாங்கள் இதை ஆதரிக்கவில்லை; அது எங்கள் கலாசாரத்திலும் இல்லை. ஆனால் பிரதமர் மோடி சோனியா காந்தியைப் பற்றிப் பேசியுள்ளார். பாஜ எம்எல்ஏக்கள் என்னை பற்றியும் எனது தாயாரையும் சட்டமன்றத்தில் திட்டியுள்ளனர். இப்படி செய்து விட்டு பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ள பாஜவின் செயல் நேர்மையற்ற அரசியல். இவ்வாறு அவர் கூறினார்.