பாட்னா: பீகார் சட்டமன்ற 2ம் கட்ட தேர்தலின் 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளில் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 6ம் தேதி முதல் கட்டமாக 121 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவில் 65 சதவீதம் பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது. இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.
இதற்காக 122 தொகுதிகளில் 40,073 கிராமப்புற ஓட்டுச்சாவடி உட்பட மொத்தம் 45,399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் 122 தொகுதிகளில் 1,302 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 3.7 கோடி வாக்காளர்கள் இன்று ஓட்டுப்போட உள்ளனர். இதில் பெண் வாக்காளர்கள் மட்டும் 1.75 கோடி பேர். இன்றைய தேர்தலில் சுமார் 6 அமைச்சர்களும் களத்தில் உள்ளனர். நேபாள எல்லையில் உள்ள மேற்கு சம்பாரண், கிழக்கு சம்பாரண், சீதாமர்ஹி, மதுபானி, சுபால், அராரியா, கிஷன்கஞ்ச் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடப்பதால் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், மூத்த அமைச்சருமான பிஜேந்திர பிரசாத் யாதவ், எட்டாவது முறையாக சுபால் தொகுதியில் போட்டியிடுகிறார். பா.ஜவை சேர்ந்த அமைச்சர் பிரேம்குமார் 1990 முதல் தொடர்ந்து 7 முறை வென்ற கயா டவுனில் மீண்டும் களமிறங்கி உள்ளார். இதே போல் பாஜவின் ரேணு தேவி (பெட்டியா), நீரஜ் குமார் சிங் பாப்லு (சத்தாபூர்), ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் லேஷி சிங் (தம்தாஹா), ஷீலா மண்டல் (புல்பராஸ்), ஜமா கான் (செயின்பூர்) ஆகியோரும் முக்கிய வேட்பாளர்கள். முன்னாள் துணை முதல்வர் தர்கீஷோர் பிரசாத், தொடர்ந்து ஐந்தாவது முறையாக கதிஹார் தொகுதியில் களமிறங்கி உள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சிறு கூட்டாளிகளான ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் மாநிலங்களவை எம்பி உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகளின் முக்கிய களமாக இரண்டாம் கட்ட தேர்தல் அமைந்துள்ளது. இதே போல் பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் தொடர்ந்து இரண்டாவது முறையாக குடும்பா தொகுதியில் போட்டியிடுகிறார். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்கான 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு பணியாளர்கள் தேர்தல் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
