பீகார் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்தது; பாஜக கூட்டணி தொகுதி பங்கீட்டில் உடன்பாடு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
பீகார்: பீகார் சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி இடையே தொகுதிப் பங்கீடு இறுதியானது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஜக்கிய ஜனதா தளம், பாஜக தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 29 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜித்தன் ராம் மஞ்சி, உபேந்திர குஷ்வாஹா கட்சி தலா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு நவ.6, 11ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜிதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவா மோர்ச்சா, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கூடுதல் இடங்களைக் கேட்டுவந்ததால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நீடித்துவந்தது.
இதேபோல், சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியுடனும் பாஜக மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். பலசுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கூட்டணிக் கட்சிகளிடையே நிலவி வந்த அதிருப்திகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, தற்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா இல்லத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று மதியம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு பேசிய பீகார் மாநில பா.ஜ.க தலைவர் திலீப் ஜெய்ஸ்வால், ‘அனைத்தும் சுமுகமாக முடிந்தது’ என்று உறுதிப்படுத்தினார்.
உடன்பாட்டின்படி, ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 101 அல்லது 102 தொகுதிகளும், பாஜகவுக்கு அதைவிட ஒரு தொகுதி குறைவாகவும் (100 அல்லது 101 தொகுதிகள்) ஒதுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. மீதமுள்ள இடங்கள் மற்ற கூட்டணிக் கட்சிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக, பிரதமர் மோடி பங்கேற்கும் பா.ஜ.கவின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.
வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் ஏற்கனவே தொடங்கிவிட்டதால், வேட்பாளர் பட்டியலை விரைந்து வெளியிட ஆளுங்கட்சி மற்றும் எதிர் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.