பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 243 தொகுதியிலும் சுயேட்சையாக வேட்பாளர்களை நிறுத்துவோம்: சங்கராச்சாரியார் அதிரடி
பாட்னா: பீகாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி அறிவித்துள்ளார். உத்தராகண்ட்டின் ஜோதிர் பீட சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி நேற்று பீகார் மாநிலம் பாட்னாவில் கூறியதாவது: பீகார் மாநிலத் தேர்தலின்போது பசு பாதுகாப்பு மற்றும் சனாதன தர்மத்துக்கு ஆதரவாக நாம் வாக்களிக்க வேண்டும். வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் 243 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நாங்கள் நிறுத்த உள்ளோம். அவர்களின் பெயர்களை இப்போது வெளியிட மாட்டேன்.
அவ்வாறு செய்தால், அவர்களின் வேட்புமனு ரத்து செய்யப்படலாம். பசு பாதுகாப்புக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் சுயேட்சை வேட்பாளர்களை 243 தொகுதிகளிலும் நாங்கள் அடையாளம் காண்போம். அவர்களுக்கு எனது ஆசி கிடைக்கும். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு வேட்பாளர் நிறுத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். அவர்கள் பசு பாதுகாப்புக்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள். பசுக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றன. ஒன்றன் பின் ஒன்றாக பல கட்சிகளை நாம் ஆட்சிக்குக் கொண்டு வந்தோம். ஆனால், இந்த திசையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்துக்களின் பாதுகாப்புக்காக பாடுபடும் வேட்பாளர்களுக்கு மட்டுமே நாம் வாக்களிக்க வேண்டும்.
நாட்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. இது மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடியதாகவும் தொந்தரவு அளிக்கக்கூடியதாகவும் உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.