Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு; தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சிகள் சரமாரி குற்றச்சாட்டு: மும்முனை போட்டியால் ஆட்சியை பிடிப்பது யார்?

பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளிடையே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், 243 தொகுதிகளைக் கொண்ட அம்மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி, நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவும், நவம்பர் 14ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, பீகார் அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், விதிமீறிய பேனர்கள், போஸ்டர்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆளும் பாஜக கூட்டணி தலைவர்களான அமித் ஷா, நிதிஷ்குமார், சிராக் பஸ்வான் போன்றோர், ‘மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம்’ என்று கூறிவருகின்றனர். அதேநேரம் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை உள்ளடக்கிய ‘இந்தியா’ கூட்டணி, தேர்தல் ஆணையத்தின் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ், ‘இந்த முறை மக்கள் மாற்றத்திற்காக வாக்களிப்பார்கள். ஒவ்வொரு பீகாரியுமே முதல்வராக இருப்பார்’ என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியோ, ‘தேர்தல் ஆணையம் பாஜகவின் கூட்டணியாகச் செயல்படுகிறது.

ஆளும் கட்சி மக்களுக்குப் பணம் கொடுக்க அவகாசம் அளித்த பிறகே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று கடுமையாகச் சாடியுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் லட்சக்கணக்கான உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது தேர்தலை அறிவித்தது நீதிமன்ற அவமதிப்பு என்றும் இடதுசாரிக் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த இரு பெரும் கூட்டணிகளுக்கு மத்தியில், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ‘ஜன் சுராஜ்’ கட்சியும் இத்தேர்தலில் களம் காண்கிறது. இதுகுறித்து பேசிய அவர், ‘வரும் 9ம் தேதி எங்கள் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் என் பெயரும் இருக்கும். நிதிஷ் குமாருக்கு இதுவே கடைசித் தேர்தலாக அமையும். எங்களின் கட்சி 48 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த மும்முனைப் போட்டியால் பீகார் தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக கூட்டணியில் சலசலப்பு

பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கிய கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இடையே உடன்பாடு எட்டப்பட்டாலும், சிறிய கூட்டணிக் கட்சிகளுக்கான இட ஒதுக்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 243 தொகுதிகளில், ஐக்கிய ஜனதா தளம் 107 இடங்களிலும், பாஜக 105 இடங்களிலும் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மீதமுள்ள 31 தொகுதிகள் ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வனின் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), ஜிதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளன. ஆனால், ஜிதன் ராம் மஞ்சி போன்ற தலைவர்கள் கூடுதல் இடங்களைக் கோரி வருவதால் பேச்சுவார்த்தையில் சிக்கல் நீடிக்கிறது. கூடுதல் தகவலாக சிராக் பஸ்வான் கட்சிக்கு மாநிலங்களவையில் ஒரு எம்பி சீட் ஒதுக்கவும் பாஜக கூட்டணியில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.