மூணாறு : மூணாறு அருகே, பெரியகானல் அருவி பகுதியில் உலா வந்த காட்டுயானையை சுற்றுலாப் பயணிகள் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு அருகே, கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பெரியகானல் அருவி அமைந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காலங்களில் இந்த அருவியில் தண்ணீர் கொட்டும். கோடைகாலங்களில் வறண்டு விடும்.
மூணாறுக்கு சுற்றுலா வரும் பயணிகள் சாலையில் நின்றவாறு அருவியை கண்டு ரசிப்பர். நீர்வரத்து அதிகமாக இருக்கும்போது புகைப்படம் எடுத்து மகிழ்வர். தற்போது அருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 9:30 மணியளவில் காட்டு யானை ஒன்று அருவியின் மேல் பாறையில் ஒய்யாரமாக நின்று கொண்டிருந்தது. அப்போது வந்த சுற்றுலாப் பயணிகள் யானையையும், அருவியின் அழகையும் படம் பிடித்து மகிழ்ந்தனர்.

