திருவனந்தபுரம்: பூடானில் இருந்து சட்டவிரோதமாக கார்கள் இந்தியாவில் விற்கப்பட்ட வழக்கில் கோவையைச் சேர்ந்த இடைத்தரகர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவை காட்டிலும் பூடான் உள்ளிட்ட பிற நாடுகளில் கார்களின் மீதான வரி என்பது மிகக் குறைவு. இதனால் அந்நாட்டில் விற்கப்படும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்களை, இந்தியாவிற்கு இறக்குமதி செய்து சட்டவிரோதமாக வரியை குறைத்து கோல்மால் செய்து விற்கின்றனர். அக்குற்றத்தில் கைதேர்ந்த கார் மாஃபியா கும்பல்தான் சமீபத்தில் பூடானில் ஏலம் விடப்பட்ட ராணுவ உயர் ரக வாகனங்கள் மற்றும் சொகுசு கார்களை பல கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளனர்.
அந்த கார்களை இமாசல பிரதேசம் வழியாக இந்தியாவிற்குள் கடத்தி போலியான ஆவணங்கள் மூலம், செகண்ட் ஹேண்ட் கார்களாக ரிஜிஸ்டர் செய்து விற்றுள்ளனர். இத்தகவல் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைக்க, வரி ஏய்ப்பு செய்து கார்கள் இறக்குமதி செய்த கும்பலையும், அவர்களிடம் இருந்து கார்கள் வாங்கியவர்களையும் டார்கெட் வைத்து தூக்க, 'ஆபரேஷன் நம்கூர்' என்ற பெயரில் ஸ்பெஷல் டீம் அமைத்து களத்தில் இறங்கினர்.
அதன் முதற்கட்ட விசாரணையில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர், நிசான் பேட்ரோல் (patrol) வகை சொகுசு கார்களை மலையாள நடிகர்களான துல்கரும், பிருத்வியும் வாங்கியதாக தகவல்கள் கசிந்துள்ளன. உடனே கேரளா விரைந்த சுங்கத்துறையினர் திருவனந்தபுரத்தில் உள்ள நடிகர் பிருத்விராஜ் மற்றும் நடிகர் துல்கரின் வீட்டில் அதிரடி ரைடு நடத்தினர். அதில் நடிகர் துல்கர் வீட்டில் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபெண்டர் வகை கார் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் சிக்கியுள்ளன. இதையடுத்து கேரளா முழுவதும் அதிகாரிகள் நடத்திய சோதனையில் முதல் நாளில் மட்டும் 36 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்களையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பூடானில் இருந்து சட்டவிரோதமாக கார்கள் இந்தியாவில் விற்கப்பட்ட வழக்கில் கோவையைச் சேர்ந்த இடைத்தரகர்களுக்கு தொடர்பு உள்ளதாக கேரள சுங்கத்துறை இயக்குனர் டி.ஜி.தாமஸ் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில்; முறையான வரி செலுத்தாமல் வெளிநாட்டு சொகுசு கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் கேரளாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 200 கார்கள் வரை முறையான சுங்கக் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி செலுத்தாமல் கொண்டுவரப்பட்டு கேரளாவில் விற்கப்பட்டுள்ளன. வாகனங்களை கண்டறிவதற்கான சோதனையை கேரளா மாநிலத்தில் செயல்படும் சுங்கத்துறையினர் தொடங்கி உள்ளனர் என அவர் தெரிவித்தார்.