*பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
செங்கம் : புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில், 2 இடங்களில் ரூ.1 கோடி செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
கலசபாக்கம் தொகுதி புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில், 2 இடங்களில் ரூ.1 கோடி செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கு ஆலத்தூரில் நேற்று பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம், புதுப்பாளையம், ஜவ்வாது மலை ஆகிய யூனியன்களில் மக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பல்வேறு பணிகள் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக கடந்த நான்கு வருடங்களில் மாவட்டத்தின் அமைச்சர் எ.வ.வேலுவின் பரிந்துரையின்பேரில், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை போடும் பணி நடைபெற்றுள்ளது. மேலும் எங்கெங்கெல்லாம் தரை பாலங்கள் இருந்ததோ, அந்த இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இனி எவ்வளவு மழை பெய்தாலும் கலசபாக்கம் பகுதியில் எங்குமே சாலை சரியில்லை, பாலம் சரியில்லை என்று சொல்லாத அளவிற்கு பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் தற்போது ஆலத்தூரிலிருந்து ஜப்திகரியந்தல் வரையும், வாய்விடாந்தாங்கல் கிராமத்தில் இருந்து கொள்ளை மேட்டு பகுதி வரையும் இரண்டு இடங்களில் ரூ.ஒரு கோடி மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி துவக்கி வைக்கப்படுகிறது. இப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், முன்னாள் யூனியன் கவுன்சிலர் ஏழுமலை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மனோகரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் இளங்கோவன், பிடிஓ நிர்மலா, இன்ஜினியர்கள் குமார், சவுந்தரராஜன் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.