Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போஜராஜன்நகர் சுரங்கப்பாதை பணி முடிந்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது: 40 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்

தண்டையார்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை போஜராஜன்நகர் சுரங்கப்பாதை பணி முழுவதும் முடிந்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர இருப்பதால், 40 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் தெருவிற்கும், மின்ட் மாடர்ன் சிட்டிக்கும் இடையே கொருக்குப்பேட்டை ரயில்வே தண்டவாளம் செல்கிறது. இப்பகுதியை சுற்றிலும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். சென்ட்ரலில் இருந்து டெல்லி, கொல்கத்தா, ஹவுரா என வடமாநிலத்திற்கு செல்லும் 50க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் மற்றும் கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மின்சார ரயில்கள், கொருக்குபேட்டை ரயில்வே கேட்டை பயன்படுத்தி வருகின்றன.

இதற்காக, அரை மணி நேரத்திற்கு ஒருமுறை, ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால், காலை, மாலை நேரங்களில் மாணவர்கள், அலுவலகத்திற்கு செல்பவர்கள், குறித்த நேரத்திற்கு ரயில்வே கேட்டை கடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அவசர மருத்துவ சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வந்து செல்வதில்கூட தாமதம் ஏற்படுகிறது. குறித்த நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க முடியாததால் பலர் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த நிலைமாற, 40 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடி வந்தனர். போஜராஜன் நகரில் ரயில்வே கேட் பிரச்னைக்கு தீர்வுகாண சுரங்கப்பாதை அமைப்படும் என 2010ல் திமுக ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. மாநகராட்சியால் டெண்டர்விட்டு பணி துவங்கப்பட்ட நிலையில், திடீரென ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததால் பணி கிடப்பில் போடப்பட்டது. அதன்பிறகு 2016ல் மாநகராட்சியும், தெற்கு ரயில்வேயும், 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி சுரங்கப்பாதை பணியை மீண்டும் துவங்கின. அதுவும் பாதியில் நிறுத்தப்பட்டது. மீண்டும் 2 ஆண்டுகள் கடந்து 2018ல் பணி துவங்கியது. ஆமை வேகத்தில் நடந்த பணி, கொரோனா தொற்று பரவல் காலகட்டத்தில் கிடப்பில் போடப்பட்டது. அதிமுக ஆட்சியில் தொடர்ந்து கிடப்பில் இருந்தது.

இதையடுத்து, திமுக ஆட்சிக்கு வந்ததும் பழைய வண்ணாரப்பேட்டை போஜராஜன் சுரங்கப்பாதையுடன் கண்ணப்பன் தெருவை இணைக்கும் வகையில், 18 கோடி ரூபாய் மதிப்பில் 2022 அக்டோபரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில், புதிதாக பணி துவங்கப்பட்டது. ரயில்வே சுரங்கப்பாதை அமையும் இடத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய் குழாய் 5 கிமீ தூரம் செல்கிறது. அவற்றை மாற்று பாதையில் அமைக்கும் பணி 2024 ஏப்ரல் முடிந்தது. இதைத்தொடர்ந்து மழைநீர் வடிகால் பணி நடக்கின்றன.

அதிகாரிகளின் அலட்சியத்தால் இப்பணி மிகவும் மந்தமாக நடந்து வந்தது. இதையடுத்து இந்த பிரச்னை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். அதன்படி போஜராஜன் நகர் சுரங்கப்பாதை பணி முழுவதும் முடிந்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதல்வரால் திறக்கப்பட உள்ளது. சுரங்கப்பாலம் திறக்கப்பட்டால் 40 ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.