பவானி: ஈரோடு மாவட்டத்தில் கோபி, சத்தி, கவுந்தப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக பவானி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால், தடுப்பணைகள் ஆங்காங்கே நிரம்பி உபரி நீர் வெளியேறி பவானி ஆற்றில் கலந்து வருகிறது.
பவானிசாகர் அணையும் நிரம்பியதால் நேற்று இரவு முதல் உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் பவானி காலிங்கராயன் அணைக்கு நேற்று முன்தினம் 5,400 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த நிலையில் இரவு விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 6,800 கன அடியாக உள்ளது.
பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீருடன், மழை நீரும் சேர்ந்து வருவதால் நீர்வரத்து மேலும் உயரும் என கருதப்படுகிறது. பவானி காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் சென்று கலந்து வருகிறது. நீர்வரத்து நிலவரத்தை நீர்வளத் துறை உதவிப் பொறியாளர் குமார் மற்றும் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.