மகாகவி பாரதியார் நினைவு நாள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சுப்பராயன் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் நாளை அமைச்சர் பெருமக்கள் பங்கேற்பு..!!
மகாகவி பாரதியார் நினைவு நாள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சுப்பராயன் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் நாளை அமைச்சர் பெருமக்கள் பங்கேற்க உள்ளனர். இது குறித்து வெளியிடபட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவு நாளை மகாகவி நாள் என அறிவித்து அந்நாளில் ,அமைச்சர் பெருமக்கள் 11.09.2025 அன்று காலை 9.30 மணியளவில், சென்னை மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் அமைந்துள்ள பாரதியாரின் திருவுருவச்சிலைக்கும் அதே நாளில் சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சர் டாக்டர் சுப்பராயன் பிறந்தநாளை முன்னிட்டு, காலை 10.00 மணியளவில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து அருகில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவப் படங்களுக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
மகாகவி பாரதியார் 11.12.1882 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயர் -இலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது கவிப் புலமையைப் பாராட்டி எட்டயபுர மன்னர் இவருக்கு பாரதி என்று பட்டம் வழங்கினார். அதன்பின், நவீன தமிழ் கவிஞர்களின் முன்னோடியாகவும், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதியாகவும் திகழ்ந்த பாரதியார், மகாகவி எனும் புனைபெயர் கொண்டு அழைக்கப் பெற்றார். தந்தை இறந்த பிறகு சில காலம் தமது அத்தையாருடன் பாரதியார் காசியில் வாழ்ந்தார். மகாகவி பாரதியார் தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் புலமை பெற்று விளங்கினார். மகாகவி பாரதியார் பல மொழிகளைக் கற்றறிந்தாலும், யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடி தமிழின் பெருமையை உலகறியச் செய்தார். மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார்.1904 முதல் 1906 வரை சுதேச மித்திரன் பத்திரிகையில் பணியாற்றினார். 1907ஆம் ஆண்டு இந்தியா என்ற வார இதழையும், பாலபாரதம் என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார்.
கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற காவியங்களைப் படைத்தார். கீதையைத் தமிழில் மொழி பெயர்த்தார். மாகவி பாரதியார் தமிழ்ப்பற்று. தெய்வப்பற்று, தேசப்பற்று, மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர். மகாகவி பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகள் கடந்தும் தமிழ்ச் சமுதாயத்திற்காக அவர் விட்டுச் சென்ற கவிதைகள். கட்டுரைகள், பாடல்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உயிரோட்டமாக நிலை பெற்றுள்ளது. பேரறிஞர் அண்ணா அவர்களால் மக்கள் கவி என்று அழைக்கப்பட்டார் மகாகவி பாரதியார். பாரதியாரின் சுதந்திரப் போராட்ட நடவடிக்கையால், ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் மறைந்தார். கலைஞர் ஆட்சிக் காலத்தில் எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த இல்லம் 12.5.1973 அன்று அரசுடைமையாக்கப்பட்டு நினைவு இல்லமாக மேம்படுத்தப்பட்டு இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரதியின் நினைவு நாளான செப்டம்பர்-11. "மகாகவி நாள்"-ஆகக் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சார்பில் "மகாகவி நாள்" ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. டாக்டர் ப. சுப்பராயன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு குமாரமங்கலத்திற்கு அருகேயுள்ள போக்கம்பாளையத்தில் பிறந்தார். இவர் ஜமீன்தார் குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும். அயர்லாந்து டப்ளின் பல்கலைக்கழகத்தில் சட்டப் பயிற்சி பட்டமும் பெற்றார்.
1918 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார் டாக்டர் ப. சுப்பராயன் சென்னை மாகாணத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர், கல்வி மற்றும் சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர். இந்தோனேசியாவிற்கான இந்தியத் தூதுவர். இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர். மாநிலங்களவை உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்தார். சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகவும் டாக்டர் ப. சுப்பராயன் பதவி வகித்தார். இவரது ஆட்சிக் காலத்தில்தான். முதல்முறையாக அரசாங்கப் பணிகளில் வகுப்புவாரி பிரநிதித்துவ அடிப்படையில் இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன. 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கு மாநில சுயாட்சி வழங்கப்பட்டபின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இராஜகோபாலச்சாரி அமைச்சரவையில் சட்டம் மற்றும் கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டு சிறை சென்றார்.
ஒன்றிய அரசின் தபால் துறை அமைச்சராக இருந்தபோது திருவள்ளுவர் மற்றும் பாரதியாரின் புகைப்படத்துடன் கூடிய தபால் தலைகளை வெளியிட்டார். அனைத்துத் தபால் துறை படிவங்களையும், தமிழ் மொழியிலும் கிடைக்கப் பெறச் செய்தார். இந்தியப் பாராளுமன்றத்தில் திருவள்ளுவர் படத்தைத் திறக்கச் செய்தார். தமிழுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் அயராது உழைத்தவரான சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான டாக்டர் ப.சுப்பராயன் நினைவைப் போற்றுகின்ற வகையில், முதலமைச்சர் சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அன்னாரின் திருவுருவச்சிலையை நிறுவி, 5.9.2023 அன்று திறந்து வைத்தார்கள். சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன் பிறந்த நாளான செப்டம்பர் 11 ஆம் நாள் அரசு விழாவாகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகாகவி பாரதியார் நினைவு நாள், டாக்டர் ப.சுப்பராயன் பிறந்த நாள் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் பெருமக்களுடன். மேயர், நாடாளுமன்ற உறுப்பினர்கள். துணை மேயர், உள்ளாட்சி பிரநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.