Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாலாற்றில் தடுப்பணை கட்டியதுண்டா என கேள்வி சரியான புள்ளிவிவரத்துடன் அன்புமணி பேசுவது நல்லது: அமைச்சர் துரைமுருகன் பதிலடி

சென்னை: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பாமகவை சார்ந்த அன்புமணி நேற்று முன்தினம் வேலூருக்கு வந்து ஒரு பொதுக்கூட்டத்தில் போர்பிரகடனம் செய்திருக்கிறார். அவர் பேசுகிறபோது, “இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவரை நான் கேட்கிறேன். பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா?\\” என்று முழக்கமிட்டிருக்கிறார். அன்புமணி கொஞ்சம் விவரமானவர் என்று இதுநாள்வரை நினைத்திருந்தேன். ஆனால், வேலூரில் என் மீது அவர் சாட்டிய தவறான குற்றச்சாட்டிலிருந்து அவருக்கு கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியாது என்று நிரூபித்திருக்கிறார். கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது தான் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுகின்ற பணியை ஆரம்பித்தார்.

அதன் தொடர்ச்சியாக, நான் இந்த துறைக்கு அமைச்சராக, கலைஞர் முதல்வராக இருந்த காலகட்டத்திலும், மு.க.ஸ்டாலின் முதல்வராக இருக்கிற இந்த காலத்திலும், பாலாற்றில் இறையங்காடு, பொய்கை, சேண்பாக்கம், அரும்பருத்தி, திருப்பாற்கடல். கவுண்டன்யா நதியில் ஜங்காலப்பள்ளி, செதுக்கரை, பொன்னையாற்றில் பரமசாத்து-பொன்னை, குகையநல்லூர், பாம்பாற்றில் மட்றப்பள்ளி, ஜோன்றாம்பள்ளி, கொசஸ்தலையாற்றில் கரியகூடல், அகரம் ஆற்றில் கோவிந்தப்பாடி, மலட்டாற்றில் நரியம்பட்டு, வெள்ளக்கல் கானாற்றில் பெரியாங்குப்பம், கன்னாற்றில் சின்னவேப்பம்பட்டு ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டியிருக்கிறேன். எனவே, அன்புமணிக்கு ஒரு சிறிய வேண்டுகோள், இனிமேலாவது பேசுவதற்கு முன், யாராவது விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.