Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் துரோகம் செய்து ஓட்டு திருட்டு நடத்தும் பாஜ: அரியலூர் பிரசாரத்தில் விஜய் கடும் தாக்கு

அரியலூர்: ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் துரோகம் செய்து பாஜ ஓட்டு திருட்டு நடத்துகிறது என்று அரியலூர் பிரசாரத்தில் விஜய் பேசி உள்ளார். அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகே நேற்றிரவு விஜய் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: உங்கள் அனைவரையும் பார்க்கும் பொழுது மனதுக்குள் ஒன்றுதான் தோன்றுகிறது, உங்களுடைய இந்த அன்புக்காக எவ்வளவு பெரிய உயரத்தையும் எவ்வளவு பெரிய வருமானத்தையும் எவ்வளவு பெரிய வசதியையும் தூக்கி எறிந்து விட்டு வரலாம்.

பாஜ அரசு கொஞ்சம் நஞ்சம் கொடுமையாக செய்கிறது. பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் காணவில்லை. இது பெரிய விஷயம் அல்ல. இதைவிட பெரிய விஷயம் இருக்கிறது. பாஜவின் ஓட்டு திருட்டு. இந்த எதிர்க்கட்சிகள் சிம்பிளா சொல்வது போல சொல்ல வேண்டும் என்றால் ஓட்டு திருட்டு வீட்டில் நம்பர் ஜீரோ என போட்டுவிட்டு ஓட்டலில் கொடுத்திருக்கிறார்கள். 2029 ஒன்றிய அரசின் ஆட்சி காலம் முடியப்போகிறது என அனைவரும் அறிந்த ஒன்று. அதனால் மாநில அரசுகளை எல்லாம் கலைத்துவிட்டு அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் தேர்தல் வைக்கின்ற ஐடியா உள்ளது.

அப்போது தானே ஒரே நேரத்தில் இந்த தில்லுமுல்லு வேலைகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்ய முடியும். இதுக்கு பெயர் என்ன ஜனநாயக படுகொலை தானே. பார்லிமென்ட் தொகுதிகள் மறுசீராய்வு. இதைத்தான் ஏற்கனவே முதலில் தமிழக வெற்றிக் கழகம் எதிர்த்தது, எப்பவும் எதிர்ப்போம். இனிமேலும் எதிர்ப்போம். இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் செய்கின்ற பாஜ அரசு செய்கின்ற துரோகம். பாஜ நமக்கு துரோகம் செய்கிறது. ஏழ்மை வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், மனசாட்சி உள்ள மக்களாட்சி அமையும் நம்பிக்கையாக இருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

* மைக் சொதப்பல் கேட்கலை... கேட்கலை ரசிகர்கள் கூச்சல்

தவெக நிர்வாகிகளும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களும் அடிப்படை வசதிகள் போன்றவற்றை கோட்டை விட்டார்கள் என்றால் விஜய் பேசுவதற்காக ஏற்பாடு செய்திருந்த மைக் கூட வேலை செய்யவில்லை. மதியம் 2.58 மணிக்கு பேசத்தொடங்கினார் விஜய். ஓரிரு விநாடிகள் மட்டுமே விஜய் பேசியதை கேட்க முடிந்தது. தொழில்நுட்ப கோளாறால் மைக் வேலை செய்யாததால் இறுதி வரை விஜய் பேச்சு கேட்கவில்லை. விஜய் பேசியதை கேட்க முடியாததால் கேட்கலை... கேட்கலை... என ரசிகர்கள் தொடர்ந்து சத்தம் போடத் தொடங்கிவிட்டார்கள். அதைக்கூட கண்டுகொள்ளாமல் கேட்காத பேச்சை 3.18 மணி வரை விஜய் பேசி 20 நிமிடத்தில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டார்.

* அதிமுக குறித்து ‘கப்சிப்’

மதுரையில் நடந்த மாநாட்டில் விஜய், அதிமுக குறித்து விமர்சனங்களை முன் வைத்தார். தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜய்யை கடுமையாக தாக்கி பேசினர். இந்நிலையில், திருச்சி மரக்கடை பகுதியில் நேற்று மதியம் நடந்த சுற்றுப்பயணத்தின் போது, அதிமுக குறித்தும், அதிமுகவின் தற்போதைய தலைவர்கள் குறித்தும் எதுவும் பேசவில்லை. அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், விஜய் அதிமுக குறித்து பேசாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

* பெரம்பலூரில் பேசாமல் சென்ற விஜய்

அரியலூரில் பிரசாரத்தை முடித்து விட்டு, நேற்றிரவு 10.05 மணிக்கு பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பஸ் நிலையத்திற்கு விஜய் வந்தார். மிகவும் காலதாமதமாக வந்ததால் பஸ்சின் மேற்பகுதிக்கு சென்று கைகளை காட்டி விட்டு பேசாமல் விஜய் உள்ளே சென்றார்.

* ‘தமிழையும், தமிழர் நாகரிகத்தையும் பாஜ அரசு அழிக்க பார்க்கிறது’

தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரசார பயணத்தை திருச்சியில் நேற்று தொடங்கினார். தொடர்ந்து மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே பிரசார பஸ்சில் ஏறி நின்று பேசியதாவது: மிக மோசமாக ஆண்டுகொண்டிருக்கும் பாசிச பாஜவை கேள்வி கேட்க வந்துள்ளேன். மக்களை வாட்டி வதைக்கும் பாஜவை விடவே விட மாட்டோம். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு ஒத்து வராத திட்டம். தமிழக மாணவர்களின் கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காமல் சதி செய்கிறது. நமது இருமொழிக்கொள்கைக்கு எதிராக இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதற்காக மிரட்டி பார்க்கிறது.

அமர்நாத் ராமகிருஷ்ணாவிடம் கீழடி ஆய்வு முடிவுகளை மாற்ற சொல்லி நெருக்கடி கொடுத்து, தமிழையும் தமிழர் நாகரிகத்தையும் ஒன்றிய பாஜ அரசு அழிக்க பார்க்கிறது. இதை தமிழகம் பார்த்து கொண்டு சும்மா இருக்காது. மற்ற மாநிலங்களுக்கு கொடுப்பதுபோல தமிழ்நாட்டுக்கு பேரிடர் காலங்களில்கூட ஒழுங்காக நிதி ஒதுக்காமல் ஒன்றிய பாஜ அரசு வஞ்சிக்கிறது. இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு தமிழக மீனவர்கள் அழிக்கப்படுவதை ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது. நம்முடைய தேர்தல் அறிக்கையில் எல்லாவற்றையும் தெளிவாக விளக்கமா சொல்லுவோம்.