Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாப்பிட்ட கை காயும் முன் துரோகம் செய்பவர் எடப்பாடி கைது திண்டுக்கல்லுக்கு ஆசை: அடுத்தடுத்து வருவாங்க பாருங்க... சரவெடி கொளுத்தும் டிடிவி

திருச்சி: திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டி: கொடநாடு கொலை வழக்கில் முதல் குற்றவாளி ஏ1 எடப்பாடி பழனிசாமி தான் என்று திண்டுக்கல் சீனிவாசன் கருத்து கூறியுள்ளார். அவரது ஆசையை அவர் கூறியுள்ளார். அவர் வனத்துறை அமைச்சராக இருந்தபோது அவரை பதவியில் இருந்து தூக்கி விடுவதாக எடப்பாடி மிரட்டியதாக தகவல்கள் வெளியானது. எடப்பாடியை பிடியுங்கள் என அவர் சொல்வதில் இருந்தே தெரிகிறது. இதை திமுக ஆட்சியில் இருக்கும் போது தான் செய்ய முடியும்.

சாப்பிட்ட கை காயும் முன் துரோகம் செய்பவர் எடப்பாடி பழனிசாமி. அவரை முதல்வர் ஆக்கிவிட்டு சிறை சென்ற சசிகலாவையே கட்சியிலிருந்து நீக்கியவர் எடப்பாடி. அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தபோது அவருக்கு ஆதரவளிக்க 122 எம்எல்ஏக்களை வலியுறுத்திய என்னையும் கட்சியிலிருந்து நீக்கியவர் அவர். எடப்பாடியை ஏற்றுக்கொள்ள அதிமுக எம்எல்ஏக்கள் முன்வரவில்லை. 70 வயதிலும் சுவர் எகிறி குதித்து செம்மலை சேலத்துக்கு தப்பி ஓடினார். பலர் காய்கறி வண்டிகளில் தப்பினர். அவர்களை நாங்கள் கேட் வாசலில் மடக்கி பிடித்தோம்.

தற்போது சினிமாவில் உச்சத்தில் உள்ள அதிக சம்பளம் பெறும் நடிகரான விஜய்யை தன்னுடன் சேர்த்துக் கொண்டு அவரால் வெற்றி பெற்றால் தன் காரியம் முடிந்தவுடன் அவருக்கும் துரோகம் செய்ய எடப்பாடி தயங்க மாட்டார். இப்பேற்பட்ட எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்குவதற்கு தகுதியற்றவர். குரங்கு கைகளில் சிக்கிய பூமாலை போல் துரோகத்தின் பிடியில் உள்ள புரட்சித் தலைவர் ஆரம்பித்த அந்த அதிமுகவை மீட்டெடுக்க அமமுகவுக்கு கடமை உள்ளது.

செங்கோட்டையனை என்னை சசிகலாவை நீக்கியதில் எடப்பாடிக்கு எந்த அழுத்தமும் இல்லை. நாங்கள் இருந்தால் அவர் முதல்வராவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும் என கருதி எங்களை நீக்கி உள்ளார். அதிமுகவில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் மவுன விரதத்திலும் தியானத்திலும் இருக்கிறார்கள். டெல்லியிலிருந்து யாராவது வந்து அனைவரையும் சேர்த்து விடுவார்கள் என நம்பி கொண்டுள்ளார்கள்.

வரும் தேர்தலோடு எடப்பாடியும் அவருக்கு ஜால்ரா அடிப்பவர்களும் வீழ்ந்து விடுவார்கள். நடக்கப் போவதை பொறுத்திருந்து பாருங்கள். எங்கள் கட்சிக்கு நான்தான் வழிகாட்டல் கொடுக்க முடியும் பாஜ கொடுக்க முடியாது. செங்கோட்டையன் பட்டியலில் அடுத்தடுத்து யார் இணைய போகிறார்கள் என பொறுத்திருந்து பாருங்கள் இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.

* திமுக ஆட்சியில் தவறு நிகழ வாய்ப்பு இல்லை

‘சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த முறை ஒன்றிய அரசுக்கு ஆதரவாக செயல்படும் பீகார் மாநிலத்தில் நடைபெறும் தில்லுமுல்லு தமிழகத்திலும் நடைபெற வாய்ப்பு உள்ளது. ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து வருகிறது. அதனால் தவறு நிகழ வாய்ப்பில்லை. திமுக ஆட்சி நடப்பதால் மட்டும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரசியல்வாதி நான் கிடையாது.’ என்று டிடிவி.தினகரன் கூறினார்.