Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சிறந்த கால்பந்து வீரருக்கான பேலன் டி’ஓர் விருது வென்ற பிரான்ஸின் டெம்பெல்லே!

பாரிஸ்: இந்த ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு வழங்கப்படும் பேலன் டி’ஓர் விருதை பிரான்சின் முன்கள வீரர் டெம்பெல்லே வென்றார்.பிரெஞ்சு இதழான ‘பிரான்ஸ் ஃபுட்பால்’ கடந்த 1956 முதல் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு ஆண்டுதோறும் பேலன் டி’ஓர் விருது வழங்கி வருகிறது. விருதுக்கு பரிந்துரைக்கப்படும் 10 வீரர்களில் இருந்து சிறந்த வீரர் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார். இந்த முறை மெஸ்ஸி, ரொனால்டோவின் பெயர் பரிந்துரைக்கப்படாததால் இந்த விருதை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு கால்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

இம்முறை பிரான்ஸின் டெம்பெல்லே, துவே, எம்பாப்பே, இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்கம், ஹாரி கேன், மொரோக்கோவின் ஹக்கிமி, போலந்தின் லெவான்டோவ்ஸ்கி, நார்வே நாட்டின் எர்லிங் ஹாலண்ட், அர்ஜெண்டினாவின் மார்ட்டினஸ், போர்ச்சுகலின் நுனோ மெண்டிஸ், ஜோவை நுவஸ், விதன்ஹா, பிரேசிலின் வினிசியஸ் ஜூனியர், ஸ்பெயினின் யமால், பேபியன் ருய்ஸ் மற்றும் எகிப்து நாட்டின் முகமது சாலா ஆகியோர் பரிந்துரையில் இடம் பெற்றனர். கடந்த ஆகஸ்ட் 2024 முதல் ஜூலை 2025 வரையிலான வீரர்களின் செயல்பாடு இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இந்த முறை பேலன் டி’ஓர் விருதை டெம்பெல்லே வென்றதாக அறிவிக்கப்பட்டார். அதையடுத்து அவரது ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தனர். 28 வயதான டெம்பெல்லே, பிஎஸ்ஜி அணிக்காக 2024-25 சீசனில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிரெஞ்சு நாட்டு கிளப் அணிக்காக 53 போட்டிகளில் 35 கோல்களை அவர் கடந்த சீசனில் பதிவு செய்துள்ளார். சக அணி வீரர்கள் கோல் பதிவு செய்ய 16 முறை உதவி உள்ளார்.

பிஎஸ்ஜி அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றிருந்தது. அதோடு ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான பேலன் டி’ஓர் விருதை ஸ்பெயினின் அடனா பொன்மதி வென்றார். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அவர் விருது பெற்றுள்ளார்.