சிறந்த கல்வி நிறுவன தரவரிசையில் 7வது ஆண்டாக சென்னை ஐஐடி முதல் இடம்: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியீடு
சென்னை: நாட்டின் சிறந்த கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி தொடர்ந்து 7வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சகம் சார்பில் உயர்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்த செயல்பாடு, பல்கலைக்கழகம், கல்லூரி, பொறியியல், நிர்வாகம், மருத்துவம், ஆராய்ச்சி, வேளாண்மை, கண்டுபிடிப்பு உள்ளிட்ட 17 பிரிவுகளில் உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை உருவாக்கப்படுகிறது. இதில், கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி, புதுமையான நடைமுறை, மாணவர்களின் கல்வித்தரம் என பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சிறந்த உயர்கல்வி தரவரிசை பட்டியல் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று வெளியிட்டார். இதில், ஒட்டுமொத்த பிரிவில் நிலையான வளர்ச்சி எட்டியதில் சென்னை ஐஐடி 7வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு, அடுத்தபடியாக பெங்களூரு ஐஐஎஸ் நிறுவனமும், 3வது இடத்தை மும்பை ஐஐடி.யும் பிடித்துள்ளது.
பல்கலைக்கழகங்கள் பிரிவில் இந்திய அறிவியல் மையம் (பெங்களூரு), ஜவஹர்லால் நேரு பல்கலை (டெல்லி), மணிப்பால் உயர் கல்வி அகாடமி (மணிப்பால்) ஆகியவை அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன. அதேபோல், மாநில பொது பல்கலைக்கழகங்கள் பிரிவில் ஜடவ்பூர் பல்கலைக்கழகம் முதலிடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் 2வது இடத்திலும் உள்ளன. மேலும், கல்லூரி பிரிவில் கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி 10 இடமும், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி 9வது இடமும் பிடித்துள்ளன. அதேபோல், கட்டிடக்கலை பிரிவில் ரூர்கே ஐஐடியும், சட்டப்பிரிவில் பெங்களூரு தேசிய சட்ட பள்ளி பல்கலைக்கழகமும் முதலிடத்தில் உள்ளன.
இந்த தர வரிசை பட்டியலில் ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு முன்னிலை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் நிரூபணம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில்,‘தரவரிசைப் பட்டியல் 2025, உயர்கல்வி சிறந்த தமிழ்நாடு என மீண்டுமொரு முறை நிரூபணமானது. இந்தியாவின் தலைசிறந்த 100 உயர்கல்வி நிறுவனங்களில் 17, தலைசிறந்த 100 கல்லூரிகளில் 33, தலைசிறந்த 50 மாநிலப் பல்கலைக்கழங்களில் 10 என இப்பட்டியல் அனைத்திலும் அதிக கல்வி நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய அனைத்துப் பகுதிகளுக்கும் பரவிய அனைத்துப் பின்னணியில் இருந்து வரும் மாணவர்களையும் வரவேற்று வாய்ப்பளிக்கும் தமிழ்நாட்டின் உயர்கல்விச் சூழலுக்குக் கிடைத்த வெற்றி இது,’என்றார்.