சென்னை: பெசன்ட் நகர் மாதா கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சின்ன வேளாங்கண்ணி என்று அறியப்படும் சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா கோயில், கிறிஸ்துவ மக்களின் திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. பல நூறு மக்கள் இங்கு தினமும் வந்து மாதாவை வழிப்பட்டு செல்கின்றனர். பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடக்கும் பெருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டிற்கான மாதா கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பெசன்ட் நகர் மாதா கோயிலை நோக்கி திரளாக வந்தனர்.
பாதயாத்திரையாக அலை அலையாய் வந்த பக்தர்களுக்கு சாலையோரங்களில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், தன்னார்வலர்கள் மோர் உள்ளிட்ட குளிர்பானங்கள், பிஸ்கட், மதிய உணவு உள்ளிட்டவைகளை வழங்கி வரவேற்றனர். அவர்கள் அனைவரும் கொடியேற்றத்திற்கான விழாவில் பங்கேற்றனர். இந்நிலையில் பெசன்ட் நகர் மாதா கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கொடியேற்றினார். பேராலய பெருவிழா கொடியேற்றத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்று வழிபட்டனர். 75 அடி உயர வெண்கல கொடி மரத்தில் 12 அடி நீளம் கொண்ட மாதா உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து கொடிவிழாவில் தொடங்கி நலம் பெறும் விழா, பக்த சபைகள் விழா, நற்கருணை பெருவிழா, தேவ அழைத்தல் விழா, உழைப்பாளர்கள் விழா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழா, ஆசிரியர்கள் விழா, குடும்ப விழா, அன்னையின் பிறப்பு பெருவிழா என ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகளும், ஜெப வழிபாடுகளும் காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பதை ஒட்டி சென்னை காவல்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தர இருப்பதால், மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் ஏராளமான தன்னார்வலர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.