பெங்களூருவில் ஏடிஎம் வேனில் கைவரிசை ரூ.7.11 கோடி கொள்ளையடித்த காவலர் உள்பட 6 பேர் கைது: ரூ.6.45 கோடி பறிமுதல்; மேலும் 2 பேருக்கு வலை
பெங்களூரு: பெங்களூருவில் ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் காவலர் உள்பட 6 பேரை கைது செய்த போலீசார், ரூ.6.45 கோடியை பறிமுதல் செய்தனர். பெங்களூருவில் கடந்த 19ம் தேதி ஜே.பி.நகர் எச்.டி.எப்.சி வங்கியிலிருந்து சவுத் என்ட் சர்க்கிள் அருகே உள்ள ஏடிஎம்மில் நிரப்புவதற்காக, சிஎம்எஸ் ஏஜென்சி நிறுவன வாகனத்தில் பணம் எடுத்துச்செல்லப்பட்டது. ஜெயநகர் காவல் எல்லைக்குட்பட்ட அசோக் தூண் அருகே அந்த வாகனம் சென்றபோது, இந்திய அரசாங்க பிளேட் பொருத்திய இன்னோவா கார் ஒன்றில் வந்த சிலர், தங்களை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்று கூறி, ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று கூறி, ரூ.7.11 கோடி பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து பெங்களூரு மாநகர காவல் துறை 11 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணையை உடனடியாகத் தொடங்கியது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அந்த இன்னோவா கார் ஆந்திராவில் திருப்பதியில் இருப்பதை கண்டுபிடித்தனர். பணம் கொள்ளை போனபோது, அந்த வாகனத்தில் இருந்த சிஎம்எஸ் ஊழியர்கள் உட்பட 30 பேரிடம் விசாரணை நடத்திய போலீசார், கோவிந்த்புரா காவல் நிலைய கான்ஸ்டபிள் அன்னப்பா நாயக், சிஎம்எஸ் நிறுவன முன்னாள் ஊழியர் சேவியர் மற்றும் சிஎம்எஸ் ஏஜென்சி வாகன மேற்பார்வையாளர் ரவி ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூ.5.76 கோடியை பறிமுதல் செய்தனர்.
நேற்று மாலை நவீன், நெல்சன் மற்றும் ரவி ஆகிய மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மேலும் ரூ.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே ரூ.5.76 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ரூ.70 லட்சத்துடன் சேர்த்து மொத்தமாக ரூ.6.45 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் ரூ.67 லட்சம் மீட்கப்பட வேண்டும். ஐதராபாத் லாட்ஜில் பதுங்கியிருந்த இந்த மூவரும் பணத்துடன் கைது செய்யப்பட்டனர். இன்னும் இருவர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் கைது செய்யப்பட்ட அன்னப்பா, சேவியர், ரவி ஆகிய மூவரையும் டிசம்பர் 1 வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க 2வது ஏசிஎம்எம் நீதிமன்றம் உத்தரவிட்டது
இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங், ‘கொள்ளையர்களை பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 200 அதிகாரிகள் களத்தில் இறக்கப்பட்டனர். 11 குழுக்கள், கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய அண்டை மாநிலங்களுக்குச் சென்று விசாரணை நடத்தி 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவின் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.6.45 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது. விசாரணைக் குழுவிற்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும்’என்றார்.


