பெங்களூருவில் பட்டப்பகலில் ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.7 கோடி கொள்ளை: கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை
பெங்களூரு: பெங்களூரு ஜே.பி.நகர் எச்.டி.எப்.சி வங்கிக்கிளையிலிருந்து ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக சிஎம்எஸ் நிறுவன வாகனத்தில் பணம் அனுப்பப்பட்டது. அசோகா பில்லர் அருகே ஒரு கும்பல் இந்த வாகனத்தை தடுத்து நிறுத்தியது. இன்னோவா காரில் வந்த 6-7 பேர், தங்களை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்று கூறி வாகனத்தை நிறுத்தியிருக்கின்றனர். ஏடிஎம் பணம் நிரப்பும் வாகனத்தில் ஓட்டுநர், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் 2 பேர் மற்றும் பணம் நிரப்பும் ஊழியர் ஆகிய 4 பேர் இருந்தனர். ஆர்பிஐ அதிகாரிகள் என்று கூறி, ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று கூறி பணப்பெட்டியுடன், பாதுகாவலர்களைத் தவிர மற்ற 2 பேரையும் இன்னோவா காரில் ஏற்றியுள்ளனர். ரூ.7.11 கோடி பணத்தை இன்னோவா காருக்கு மாற்றி, டைரி சர்க்கிள் மேம்பாலத்தின் மேல் காரை நிறுத்தி, அவர்கள் 2 பேரையும் இறக்கிவிட்டு பணத்துடன் அந்த கும்பல் காரில் தப்பிச்சென்றனர்.
இதுதொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்த சுட்டகுண்டேபாளையா போலீசார், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கினர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், அந்த இன்னோவா காரில் பொருத்தப்பட்டிருந்தது போலி நம்பர் பிளேட் என்பதையும், ஹொசகோட்டையை நோக்கி சென்றதையும் கண்டுபிடித்தனர். போலீசார் விசாரணையில் கொள்ளை கும்பல் பயன்படுத்திய எண் கொண்ட அசல் கார் மாருதி சுசுகி கார் என்பதும், தெரியவந்தது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களை பிடிக்க பெங்களூரு நகருக்குள்ளும் எல்லைப்பகுதிகளிலும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


