Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெங்களூருவில் ஆர்சிபி வெற்றி விழாவை நடத்தியது கர்நாடக அரசா? கிரிக்கெட் வாரியமா? கர்நாடக உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

கர்நாடகா: பெங்களூருவில் ஆர்சிபி வெற்றி விழாவை நடத்தியது கர்நாடக அரசா? கிரிக்கெட் வாரியமா? என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் 18 ஆண்டுகளுக்கு பின்னர் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மைதானத்திற்கு வெளியே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தை கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 47 பேர் காயமடைந்தனர். கர்நாடக மாநில அரசு, பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி, விதான சவுதாவிலிருந்து சின்னசாமி மைதானம் வரையிலான வெற்றி ஊர்வலத்தை முன்கூட்டியே ரத்து செய்திருந்தது.

இருப்பினும், மாலை 3.30 முதல் 4.30 மணிக்கு இடையில், மைதானத்திற்கு செல்லும் பாதையின் ஒரு தடுப்பு உடைந்ததால், மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். அதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அம்மாநில முதல்வர் சித்தராமையா, கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

மேற்கண்ட சோக சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், கர்நாடக மாநில அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், ‘சின்னசாமி விளையாட்டு மைதான கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்க, பெங்களூரு நகர மாவட்ட துணை ஆணையரும், மாஜிஸ்திரேட்டுமான மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜி.ஜகதீஷாவை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரியின் விசாரணை முடிந்து அடுத்த 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை மாநில அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விசாரணை, கூட்ட நெரிசலுக்கு காரணங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் பொறுப்பானவர்கள் குறித்து ஆராயும்.

இந்நிலையில் கர்நாடகா நீதிமன்றம் இன்று மதியம் விசாரணையை தொடங்கியது. விசாரணையில் கர்நாடக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பெங்களூருவில் ஆர்சிபி வெற்றி விழாவை நடத்தியது கர்நாடக அரசா? கிரிக்கெட் வாரியமா? என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு நிகழ்ச்சிகளை வைத்தது ஏன்? பாதுகாப்பு நடவடிக்கை என்னென்ன எடுக்கப்பட்டது? என நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.

34,600 பேர் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யக்கூடிய மைதானத்துக்கு இலவசம் என்பதால் 2.5 லட்சம் பேர் வந்தனர். சின்னசாமி மைதானத்தில் 21 கதவுகள் திறந்திருந்த போதிலும் 3 வழிகளில் உயிரிழப்பு நடத்துள்ளது என்றும் 15 நாட்களில் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம் என்று கர்நாடக அரசு கூறியுள்ளது.

பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழப்பு தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்துள்ளது. 11 பேர் உயிரிழப்பு குறித்து தானாக முன்வந்து உயர்நீதிமன்றம் நடத்தும் விசாரணையில், அரசு பதில் அளிக்க உத்தரவு அளித்துள்ளது. ஐபிஎல், பிசிசிஐ தரப்பு விளக்கம் அளிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு அளித்துள்ளது. நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட் வழக்கை ஜூன் 10க்கு ஒத்திவைத்தது