வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது : இந்திய வானிலை ஆய்வு மையம்
டெல்லி : தமிழ்நாட்டில் நாளை முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7 முதல் 11 செ.மீ. வரை கனமழை பெய்ய வாய்ப்பு என்பதால் ஜூலை 15 முதல் 20 வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டது. அதில், "தென்மேற்கு மேற்கு வங்கம், அதனை ஒட்டி பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.
வடமேற்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு ராஜஸ்தானில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது.அடுத்த 2 நாட்களில் மேற்கு - வடமேற்கு திசையில் ராஜஸ்தான் வழியே மெதுவாக காற்றழுத்த தாழ்வு பகுதி நகரக்கூடும்."என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சந்தியூரில் 7 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது. நாமக்கல் ராசிபுரத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு இடத்தில் மட்டும் கனமழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் மதியம் 1 மணிக்குள் 4 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மதியம் 1 மணிக்குள் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.