Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஜிஎஸ்டி குறைப்பின் பலன்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்: பாஜ தொண்டர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு

புதுடெல்லி: டெல்லி தீனதயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் டெல்லி மாநில பாஜ கட்சியின் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்து கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது: பாஜ மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள் நாட்டில் ஒரு புதிய மாடல் நல்லாட்சியை வழங்கியுள்ளன. வளர்ச்சியும், மரபும் என்ற மந்திரத்துடன் நாங்கள் முன்னேறி வருகிறோம். நாட்டிற்கும், மக்களுக்கும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறோம். ஊழலுக்கு எதிரான தீர்க்கமான போராட்டத்திற்கான நம்பிக்கையை வழங்கி நாட்டை மோசடிகளிலிருந்து விடுவித்தோம்.

எங்கள் அரசு மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவதோடு, அவர்களின் சேமிப்பை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்துகிறது. 2014ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.2 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால் வரி விதிக்கப்பட்டது. இப்போது, ரூ.12 லட்ச வருமானத்திற்கு கூட வரி பூஜ்ஜியம். ஜிஎஸ்டி விஷயத்திலும் இதே நிலைதான். 2014க்கு முன்பு, ஒரு குடும்பம் ஓராண்டில் தனது அன்றாடத் தேவைகளுக்கு ரூ.1 லட்சம் செலவிட்டால், சுமார் ரூ.25,000 வரி செலுத்த வேண்டியிருந்தது.

நாங்கள் ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தினோம். விலைகள் குறைந்தன, இப்போது, அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்குப் பிறகு, அந்த குடும்பத்தினர் ரூ.5,000 முதல் ரூ.6,000 மட்டுமே வரி செலுத்த வேண்டும். 2014 உடன் ஒப்பிடும்போது ரூ.20,000 சேமிப்பு ஏற்பட்டுள்ளது. வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி சேமிப்புகளையும் சேர்த்தால், ஒவ்வொரு ஆண்டும் மக்கள் ரூ.2.5 லட்சம் கோடியை மிச்சப்படுத்துவார்கள். அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் பலன்கள் சாமானிய மக்களைச் சென்றடைவதை பாஜ தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அதற்கான விழப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு கடையிலும் சுதேசி பொருட்கள் விற்கப்படுகின்றன என்று எழுதப்பட்ட பலகைகள் இருப்பதை நம் தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும். வெளிநாட்டு பொருட்களை நாம் எவ்வளவு குறைவாகச் சார்ந்திருக்கிறோமோ, அது நாட்டிற்கு நல்லது. பாஜ கட்சி ஆட்சியில் இருப்பது அதிகாரத்திற்காக அல்ல, சேவைக்காக மட்டுமே. நமது அலுவலகங்கள் இந்த உணர்வை உயிர்ப்பிக்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.