கட்டுமானத்திற்கு முன் மண், குடிநீர், அஸ்திவார பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்: உதவி பொறியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை
சென்னை: கட்டுமானத்திற்கு முன்பு மண், குடிநீர், அஸ்திவாரம் உள்ளிட்ட முதற்கட்ட பணிகளை அதிக கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும் என உதவிப்பொறியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை, சேப்பாக்கம் பொதுப்பணித்துறை பயிலரங்கில், 16.9.2025 முதல் 25.9.2025 வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, பொதுப்பணித்துறையில் பணியில் சேர்ந்த உதவிப் பொறியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. பயிற்சி வகுப்புகளுக்கு சென்று அமைச்சர் எ.வ.வேலு, பயிற்சி பெறும் உதவிப் பொறியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: பல துறைகளின் கட்டுமானப் பணிகள், பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயன்பாட்டுத்துறையின் தேவையின் அடிப்படையில் மதிப்பீடு தயார் செய்ய வேண்டும். பயன்பாட்டுத் துறையுடன் இணக்கமாக செயல்பட வேண்டும். உதவிப் பொறியாளர்கள், முதற்கட்ட பணிகளாக, மண் பரிசோதனை, குடிநீர் பரிசோதனை, அஸ்திவாரம் பணிகளின்போது பூச்சி தடுப்பு முறை, கட்டுமானப் பொருட்கள் பரிசோதனை, உப்பு நீரை தவிர்த்தல், சாம்பல் நிறத்துடன் சிமென்ட் உள்ளதா என்பதை பரிசோதித்தல், மணல் தூசி துரும்பு இல்லாமல் இருப்பதை உறுதி செய்தல், கான்கிரீட்டுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகள் துரு இல்லாமல் இருப்பதை உறுதி செய்தல், செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடுதல் அனைத்து பணிகளும் வரைபடங்கள் மற்றும் தொழில்நுட்ப விவரம் அடிப்படையில் பணி நடப்பதை உறுதி செய்தல், பணிகளில் ஒப்பந்ததாரர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல், தொழிலாளர்களை கண்காணித்தல், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்தல், கட்டுமானத்தின்போது ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க உறுதிசெய்ய பொறுப்புடன் செயல்படுத்துவது அவசியம்.