சென்னை: மாவீரன் அழகு முத்துக்கோனின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் என பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்திய விடுதலைக்காக அவர் நடத்திய போர்களையும், அவர் செய்த தியாகங்களையும் நினைவு கூர்கிறேன். வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த அவருக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன்.
இந்திய விடுதலைப் போரில் வீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பங்களிப்பும், தியாகமும் ஈடு இணையற்றது ஆகும். ஆங்கிலேயர்களுடன் நடந்த போரில் தோல்வியடைந்து விட்ட சூழலில், மன்னிப்புக் கேட்டு வரி செலுத்த ஒப்புக்கொண்டால், உயிரையும், நிலத்தையும் காப்பாற்றிக் கொள்ளலாம் என நிபந்தனை விதிக்கப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்து, பீரங்கியின் வாயில் வைத்து சுடப்படும் தண்டனையை மகிழ்வுடன் ஏற்ற மாவீரன் அவர். அவரின் வீரத்தையும், தியாகத்தையும் நாம் போற்றுவோம். அவரது வீரம் செறிந்த வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.