*நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குன்னூர் : குன்னூர் அருகே தனியார் மருத்துவமனையில் கொட்டப்படும் கழிவுகளை கண்டு கரடிகள் குடியிருப்புகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் தொடர்ந்து பீதியடைந்து வருகின்றனர்.
குறிப்பாக வனப்பகுதியில் போதுமான உணவு கிடைக்காததால் குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பை தொட்டிகளிலும், தேயிலை தோட்டங்களில் உள்ள பழ மரங்களிலும் உணவுகளை தேடி பசியாறி வருகிறது.
இதனிடைய குடியிருப்பு குடியிருப்பு பகுதிகளை சுற்றி பொதுமக்கள் தேவையற்ற குப்பைகளை வீசி செல்வதால், கரடிகள் அதனை உட்கொள்வதற்காக தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளையை நோட்டமிட்டு வருகின்றன.
உழவர் சந்தை வழியாக குன்னூர்-பெட்போர்ட் செல்லும் சாலையோரத்தில் தனியார் மருத்துவமனையில் சேகரிக்கப்படும் கழிவுகளை சாலை ஓரங்களில் கொட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் தற்போது அந்த இடம் குப்பை மேடுகளாக காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி உலா வரும் கரடிகள் குப்பைகளை கலைத்து அதில் ஏதேனும் உணவுகள் உள்ளதா? என்று தேடுகின்றன.
மேலும் சாலையோரம் முழுவதும் உணவுகளை தேடி செல்வதால் பெட்போர்ட் சுற்றுவட்டார பகுதியில் நடமாட்டம் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே தனியார் மருத்துவமனையிலிருந்து இவ்வாறு கொட்டப்பட்டு வரும் கழிவுகளை கண்டறிந்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அப்பகுதியில் தற்போது கொட்டப்பட்டுள்ள குப்பைகளை நகராட்சியினர் அகற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.