*பொதுமக்கள் பீதி
அம்பை : மணிமுத்தாறு வனப்பகுதியில் இருந்து குடிநீர், இரை தேடி யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்டவை மலையடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு, சிங்கம்பட்டி, தெற்கு பாப்பான்குளம், கல்லிடைக்குறிச்சி, பொட்டல் ஆகிய கிராமங்களுக்குள் வருவது வாடிக்கையாகி விட்டது. இப்பகுதி விளை நிலங்களை சேதப்படுத்துவதோடு வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழிகளை சிறுத்தைகள் வேட்டையாடி செல்கின்றன.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள தெற்கு பாப்பான்குளம் பகுதிக்கு வந்த கரடி, பஞ். தலைவர் இசக்கிமுத்து என்பவரது வீட்டினருகே உள்ள அவருக்கு சொந்தமான பேவர்பிளாக் செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலையில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி சென்றது. சம்பவத்தன்று இரவு செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு மணல் கொண்டு வந்த லாரி டிரைவர் உள்ளே கரடி நடமாடுவதை கண்டு பீதியில் அருகேயுள்ள பஞ். தலைவர் வீட்டிற்கு சென்று தெரிவித்தார்.
ஆட்கள் நடமாட்டம் இருப்பதை கண்ட கரடி அங்கிருந்து வனப்பகுதிக்கு ஓட்டம் பிடித்தது. இக்காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் சமூக வலைதளங்களில் வைரலானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தும் குடியிருப்பு பகுதியில் நடமாடும் கரடியை விரட்ட வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரவு நேரங்களில் ரோந்து பணியை அதிகரிப்பதோடு, கரடி நடமாடும் பகுதிகளில் கூண்டுகள் வைத்து அவற்றை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.