Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இளம் வீரர்களை ஸ்டார்களாக உருவாக்க பிசிசிஐ தீவிரம்: வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரத்யேக பயிற்சி

மும்பை: இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை நட்சத்திர வீரர்களை உருவாக்கும் திட்டத்தில் பிசிசிஐ தீவிரமாக இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்திய கிரிக்கெட்டின் இளம் பேட்டிங் புயலாகக் கருதப்படும் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி, தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் சிறப்பு பயிற்சி மையத்தில் பிரத்யேக பயிற்சி பெற்று வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ஏ அணி ஆட உள்ள தொடருக்கு முன்னதாக, அவருக்கு இந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பீகாரைச் சேர்ந்த 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான பேட்டிங் திறமையால் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். மிக இளம் வயதிலேயே ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

மேலும், இந்தியா யு19 மற்றும் உள்ளூர் ஒருநாள் போட்டிகளிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார். சமீபத்தில் இந்திய யூத் அணியில் இடம் பெற்று இங்கிலாந்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டுத் திரும்பிய வைபவ், உடனடியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 10ம் தேதி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வைபவ் சென்றுள்ளார். அங்கே, அவருக்காகவே பிரத்யேகமாக ஒரு பயிற்சித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதில், பேட்டிங்கின் நுணுக்கங்கள் மற்றும் போட்டி சூழ்நிலைகளுக்கு ஏற்ப விளையாடுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து வைபவின் சிறு வயது பயிற்சியாளர் மனிஷ் ஓஜா கூறுகையில், “பிசிசிஐ நீண்ட கால நோக்குடன் செயல்படுகிறது. சீனியர் வீரர்கள் படிப்படியாக ஓய்வு பெற்று வருகின்றனர்.

அந்த வெற்றிடத்தை நிரப்ப, அடுத்த தலைமுறை இளம் வீரர்கள் முழுமையாக தயாராக இருக்க வேண்டும். வைபவிற்கான இந்த பயிற்சி அந்தச் செயல்முறையின் ஒரு பகுதிதான். நாங்கள் வீரர்களை ஒவ்வொருவராக தேர்ந்தெடுத்து, சர்வதேச கிரிக்கெட்டின் சவால்களுக்கு ஏற்ப அவர்களைத் தயார்படுத்துகிறோம். வைபவ் 10 இன்னிங்ஸ் விளையாடினால், அதில் 7-8 இன்னிங்ஸ்கள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். அந்த நிலைத்தன்மையை கொண்டு வருவதே எங்கள் இலக்கு” என்றார். பெங்களூருவில் ஒரு வாரம் நடைபெறும் இந்த சிறப்பு பயிற்சிக்கு பிறகு, வைபவ் சூர்யவன்ஷி ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியுடன் இணைந்து கொள்வார். இந்த பயிற்சி, அவரது பேட்டிங்கை மட்டுமல்லாது, உடற்தகுதி, பீல்டிங் என ஒரு முழுமையான வீரராக அவரை செதுக்குவதற்கு பயன்படும்.