வங்கக்கடலில் வரும் 26, 27 தேதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்:வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 26, 27 ஆகிய தேதிகளில் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 7 நாட்கள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
அதேபோல் வட தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரடைந்துள்ளது. சென்னையில் 2 நாட்கள் நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தென்மேற்குப் பருவமழையின் ஒட்டுமொத்த அளவு இயல்பான அளவை விட 5 சதவீதம் அதிகரித்து, 29.5 செமீ ஆகப் பதிவாகியுள்ளது. இது இயல்பை விடக் குறைந்து காணப்பட்ட மழை அளவை மீட்டெடுத்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. செப்டம்பர் 26, 27 தேதிகளில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறையக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.