சென்னை: வங்கக் கடல் பகுதியில் நிலை ெகாண்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தென்மேற்கு பருவக் காற்று வங்கக் கடல் பகுதி நோக்கி செல்வதால் தமிழகத்தில் 28ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வங்கக் கடலில் வட தமிழக எல்லையின் மேலடுக்கிலும், கீழடுக்கிலும் தெற்கு ஒடிசா- ஆந்திரப் பகுதியின் மையமாகக் கொண்டு நீடித்துக் கொண்டு இருந்த காற்று சுழற்சி ஆந்திராவில் இருந்து விலகியுள்ளது. மத்திய வங்கக் கடல் முதல் வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள இந்த காற்று சுழற்சி, இரு காற்றின் இணைவை ஏற்படுத்தி ஆந்திராவில் நிலை கொண்டுள்ளது. குறிப்பாக வங்கக் கடலில் இருந்து தரையேறும் காற்று மேற்கு வங்கம் வழியாக சென்று சுழன்று மீண்டும் வங்கக் கடல் பகுதிக்கே வருகிறது. இந்நிலையில் வடக்கில் இருந்து வரும் குளிர்காற்றும், மேற்கில் இருந்து வரும் வெப்பநீராவியும் இணைந்து கோதாவரி மாவட்டத்தில் மழை கொடுக்கும்.
இதற்கிடையே, ஹாங்காங் பகுதியில் உருவான ‘வைப்பா புயல்’ செயலிழந்த நிலையில் மியான்மர் வழியாக வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நிலை கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே வங்கக் கடலில் நீடித்துக் கொண்டு இருக்கும் காற்று சுழற்சியுடன் இந்த செயலிழந்த புயலின் காற்றழுத்தமும் வந்து இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி வைப்பா புயலை நோக்கி தென்மேற்கு பருவக் காற்று ஈர்க்கப்படுகிறது. நேற்று வட மாநிலங்களில் நீடித்துக் கொண்டு இருந்த காற்று சுழற்சி, கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் நுழைந்துள்ளால் மழை கொடுக்க இருக்கிறது. குமரிமுனை வழியாகவும், ஆரியங்காவு வழியாகவும், தேனி மாவட்டம் வழியாகவும், வால்பாறை வழியாகவும் இந்த காற்று நுழையும். தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்து கொண்டு இருக்கும் மழை படிப்படியாக வலுப்பெறும்.
தற்போது தென்சீனக் கடல் பகுதியில் ஒரு காற்று சுழற்சியும், பசிபிக் கடல் பகுதியில் ஒரு காற்று சுழற்சியும், வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்று சுழற்சியும் நிலை ெகாண்டுள்ளதால், தமிழ்நாடு ஊடாக தென்மேற்கு பருவக் காற்று பயணிக்க உள்ளது. அதனால் குற்றாலம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழை பெய்யும் முல்லைப்பெரியாறு, வால்பாறை பகுதிகளில் கனமழை பெய்யும். இந்த மழை இம்மாதம் 28ம் தேதி வரை நீடிக்கும். தென்மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகர், மதுரை பகுதிகளிலும், ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர் பகுதிகளில் பெரிதாக மழை பெய்ய வாய்ப்பில்லை.
மலைப்பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அப்ேபாது வெப்பம் குறையும். மேற்கு திசை காற்று இதமாக இருக்கும் என்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு,காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். ஆந்திராவில் ஓங்கோல், விஜயவாடா, விசாகப்பட்டினம் பகுதிகளிலும் மழை பெய்யும். இந்த மழை தெலங்கானா வரையில் பெய்யும். தமிழ்நாட்டில் டெல்டாவில் மாலையில் மழை பெய்யும் சூழ்நிலை உருவானாலும், மேற்கு திசையில் இருந்து வேகமாக வங்கக் கடல்நோக்கி செல்லும் காற்று வெப்பத்தால் மேலெழுந்து கடலுக்குள் சென்றுவிடும் என்பதால், அங்கு மழை குறையும். சென்னையில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில், 22ம் தேதியில் ஹாங்காங் பகுதியில் இருந்து செயலிழந்த நிலையில் வங்கக் கடல் பகுதிக்கு வரும் வைப்பா புயல் 24ம் தேதி தீவிரம் அடைந்து ஒடிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் வழியாக மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத் வழியாக, பாகிஸ்தான் நோக்கி பயணிக்கும். அப்போது தெற்கு காற்று டெல்டாவில் நுழையும். அதனால் அங்கு மழை பெய்யும். தெற்கு காற்று வடக்கு நோக்கி வீசும் போது, டெல்டாவிலும், தூத்துக்குடி, ராமேஸ்வரம், உள் மாவட்டங்களிலும், வட கடலோரப் பகுதியிலும் மழை பெய்யும். தென்மாவட்டங்களில் 25ம் தேதிக்குள் மிககனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் முதல் அனைத்து நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.