வங்கக்கடல் பகுதிகளில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தென்கிழக்கு மத்திய பிரதேசம், அதனை ஒட்டிய பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
செப்.3ம் தேதி வாக்கில் வடக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அடுத்த 2 நாளில் மேற்கு - வடமேற்கு திசையில் நகரக் கூடும். செப்.5ல் மேற்கு வங்கம் - வடக்கு ஒடிசா கடலோரப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.
செப்.10ம் தேதி வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்றும், நாளையும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.