சென்னை: வட கிழக்கு பருவமழை தீவிரம் சற்று குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் தற்போது பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவுகிறது. மேலும், கிழக்கு திசையில் இருந்து வீசும் குளிர் காற்று காரணமாக காலையில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. குளிர்ந்த காற்றும் வீசுகிறது. அதன் தொடர்ச்சியாக குளிரும் நிலவுகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் வட மேற்கு திசையில் நிலை கொண்டுள்ள வளி மண்டல காற்று சுழற்சியின் காரணமாக மீண்டும் மழை பெய்வதற்காக சூழ்நிலை உருவாகியுள்ளது.
மேலும், கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் மழை பெய்வதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து, 14ம் தேதி வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் இன்றும் நாளையும் வீசும். 11, 12ம் தேதிகளில் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். அத்துடன் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் 55 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.


