சென்னை: தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் மிகத் தீவிரம் அடைந்ததை அடுத்து, வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்துள்ளது. வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்தும், ஒருசில இடங்களில் 1-2 டிகிரி இயல்பைவிட குறைந்தும் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னை, திருநெல்வேலி, வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. மேலும், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் உருவாகியுள்ளது. இதன் காரணமாக திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றும் நாளையும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் மணிக்கு 40 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்றுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 22ம் தேதி முதல் 25ம் தேதி வரையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.