வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. தெடந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் வலுவடையக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்படை விட 6% குறைவாக பெய்துள்ளது. பருவமழை காலத்தில் இயல்பாக 311 மி.மீ மழை பொழியும் நிலையில் தற்போது வரை 293.9 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 23% குறைவாக பெய்துள்ளது. பருவமழை காலத்தில் இயல்பாக 562.4 மி.மீ மழை பொழியும் நிலையில் தற்போது வரை 431.6 மி.மீ மட்டுமே மழை பெய்துள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழை பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நாலுமுக்கு 11 செ.மீ., காக்காச்சி, மாஞ்சோலையில் தலா 9 செ.மீ., மைலாடியில் 7 செ.மீ., சிவகங்கை, கன்னியாகுமரியில் தலா 6 செ.மீ., லால்பேட்டை, பாபநாசத்தில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.


