Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை!

சென்னை: கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான சுதர்சனம் கொலை வழக்கில் குற்றவாளிகள் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆபிரகாம் லிங்கன், குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ.வாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம். கடந்த 2005 ஜனவரி 9ம் தேதி அதிகாலைபெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள இவரது வீட்டில் புகுந்த 5 பேர் சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். மனைவி மற்றும் மகன்களை தாக்கி 62 சவரன் நகைகளை கொள்ளையடித்தனர்.

குற்றவாளிகளை பிடிக்க ஐஜி ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை அடுத்த மாதத்திலேயே கொள்ளையர்கள் யார் என கண்டுபிடித்தது. முக்கிய குற்றவாளியை பிப்ரவரி 1ம் தேதி கைது செய்தது. மார்ச் மாதத்தில் அரியானா, ராஜஸ்தானனை சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

செப்டம்பரில் முக்கிய குற்றவாளிகள் இருவர் வடமாநிலத்தில் என்கவுன்டர் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தனிப்படை போலீசார், 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் ஜாமீன் பெற்ற மூன்று பெண்கள் தலைமறைவாகி விட்டனர். கைது செய்யப்பட்ட ஓம்பிரகாஷ் பவாரியா உள்பட இருவர் சிறையிலேயே இறந்துவிட்டார். மீதமுள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தார் சிங் ஆகிய நான்கு பேருக்கு எதிரான வழக்கை சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் விசாரித்து வந்தார்.

வழக்கில், 86 பேர் காவல் துறை சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், ஜெகதீஷ் உள்பட 4 பேருக்கு எதிரான இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார். தீர்ப்பில் ஜெயில்தார் சிங் தவிர மற்ற 3 பேரும் குற்றவாளிகளாவர். அவர்களுக்கான தண்டனை விவரம் நவம்பர் 24ம் தேதி(இன்று) அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குற்றவாளிகளான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஆபிரகாம் லிங்கன் உத்தரவிட்டார்.