20 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் உள்ள பவாரியா கொள்ளையர்கள் வழக்குகளை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும்: தமிழக டிஜிபிக்கு முன்னாள் டிஜிபி ஜாங்கிட் கடிதம்
சென்னை:தமிழ்நாடு காவல்துறையின் டிஜிபி வெங்கடராமனுக்கு முன்னாள் டிஜிபி ஜாங்கிட் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 1995 முதல் 2005 வரையிலான காலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பான நெடுஞ்சாலை கொள்ளைகள் மற்றும் ஆதாயத்திற்காக நடந்த கொலைகள் நடந்ததை நீங்கள் அறிவீர்கள். 9.1.2005 அன்று அப்போதைய கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ சுதர்சனம் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு தான், எனது தலைமையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.
ஆரம்பத்திலேயே, எம்.எல்.ஏ கொலை, முந்தைய 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்த குறைந்தது 24 குற்றங்களின் அதிர்ச்சியூட்டும் தொடரின் ஒரு பகுதியாகும் என்பதை நாங்கள் உறுதியாக கூற முடிந்தது. இந்த சிறப்பு குழுவின் மூலம் தமிழ்நாடு காவல்துறை இந்த வழக்குகளை வெற்றிகரமாக கண்டறிந்த போது, மாநிலம் முழுவதும் பெரும் நிம்மதியும் பாராட்டும் கிடைத்தது அனைவரும் அறிந்ததே. வட இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று, 13 பயங்கரமான பவாரியா குற்றவாளிகளைப் பிடித்தோம், உத்தரபிரதேசத்தின் மீரட்டின் புறநகரில் இருவரை என்கவுன்டர் செய்தோம்.
கைது செய்யப்பட்ட 13 பேரில், 4 பேர் வாலாஜா காவல் நிலைய குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என நிரூபிக்கப்பட்டனர். இந்த குற்றவாளிகளில் இருவர் \”சாகும் வரை தூக்கிலிடப்பட வேண்டும்\” என்று தண்டனை விதிக்கப்பட்டதை நான் பெருமையுடன் நினைவு கூர்கிறேன். மேலும் நீதிமன்றம் தமிழ்நாடு காவல்துறையின் பணியை ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையின் பணியுடன் ஒப்பிட்டுப் பாராட்டியது. உயர் நீதிமன்றம் பின்னர் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. இந்த வழக்குகளில் முதன்மையான 15 குற்றவாளிகளை தவிர, பெரிய அல்லது சிறிய குற்றங்களுக்காக சந்தேகிக்கப்படும் அல்லது தேடப்படும் 21 பேர் உள்ளனர் என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
அப்போது கைது செய்யப்பட்ட பெரும்பாலான குற்றவாளிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு தற்போது தலைமறைவாக உள்ளனர். ஆயுள் தண்டனை அனுபவித்த 4 குற்றவாளிகள் மட்டுமே காவலில் வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் தலைவன் ஓமா பவாரியா வேலூர் சிறையில் இருந்தபோது இறந்தார். அந்தக் காலகட்டத்தில் தலைமறைவான 21 சந்தேக நபர்களில் யாரும் இன்று வரை கைது செய்யப்படவில்லை என்று அறியப்படுகிறது. பவாரியா தொடர்பான மீதமுள்ள 20 வழக்குகள் அடையாளம் காணப்பட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால், இந்த வழக்குகளை பின் தொடர்வதற்கு சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தலைமறைவான அனைத்து குற்றவாளிகளையும், ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட்கள் நிலுவையில் உள்ளவர்களையும் கைது செய்ய சிபிசிஐடி மேற்பார்வையின் கீழ் சிறப்பு குழுக்கள் அமைக்க வேண்டும்.


