டெல்லி: ஜார்ஜியாவில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்றார் . டைபிரேக்கர் சுற்றில் சக வீராங்கனையான இந்தியாவின் கோனேரு ஹம்பியை தோற்கடித்தார் திவ்யா. 2ஆவது இடம் பெற்ற இந்தியாவின் கோனேரு ஹம்பிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக்கிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். "பத்தொன்பது வயதில் FIDE மகளிர் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற திவ்யா தேஷ்முக்கிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கோனேரு ஹம்பி இரண்டாம் இடத்தைப் பிடித்ததால், சதுரங்க உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியாளர்கள் இருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இது நம் நாட்டில், குறிப்பாக பெண்கள் மத்தியில் மிகுதியான திறமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தனது புகழ்பெற்ற வாழ்க்கை முழுவதும் சிறந்து விளங்கியதற்காக கோனேரு ஹம்பிக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இரண்டு பெண் சாம்பியன்களும் தொடர்ந்து அதிக பெருமைகளைக் கொண்டு வந்து நமது இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்" என குடியரசுத் தலைவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.