Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வீடியோ கேமிங் பயிற்சி : கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை : நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்காக Google Play மற்றும் Unity Game Developer Training program என்ற புதிய முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், இளைஞர்களுக்கு வேலைவாய்பினை உருவாக்கி அவர்களின் கனவுகளை ’நான் முதல்வன்’ திட்டம் நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டத்தால் உலகின் முன்னணி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்காக Google Play மற்றும் Unity Game Developer Training program என்ற புதிய முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.

Google Play மற்றும் Unity Game Developer Training Program என்பது Google Play, Unity மற்றும் முன்னணி கேம் துறையினர் இணைந்து வழங்கும் ஒரு சிறப்பு திறன் பயிற்சி ஆகும். இது கேம் டிசைன், டெவலப்மென்ட் மற்றும் மானிட்டைசேஷன் ஆகியவற்றில் உலகத் தரத்திலான தொழில்நுட்ப திறன்களை வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த கணினி அறிவியல் துறையிலுள்ள (CSE) இறுதியாண்டு இன்ஜினியரிங் மாணவர்களுக்கும் மற்றும் நடப்பாண்டில் உயர்கல்வி முடித்த மாணவர்களுக்கும் இது சிறந்த வாய்ப்பாகும்.

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

இலவச Unity லைசென்ஸ், இலவச பயிற்சி, தேர்வு தயாரிப்பு அமர்வுகள், தொழில் நிபுணர்களுடன் சந்திப்பு மற்றும் உரையாடல் வாய்ப்பு, மற்றும் ஸ்டார்ட்-அப் ஆர்வமுள்ளவர்களுக்கு இன்க்யூபெட்டர் மற்றும் முதலீடுகளுக்கான வாய்ப்பு ஆகியவை அடங்கும். முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 250 மாணவர்களுக்கு இந்த திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

ஒவ்வொரு மாணவருக்கும் தலா 32,000 ரூபாய் (அமெரிக்க டாலர் 378) மதிப்புடைய Unity லைசென்ஸ் மூலம் இந்த பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இதன் மொத்த மதிப்பு 80,32,500 ரூபாய் (எண்பது லட்சத்து முப்பத்திரண்டு ஆயிரத்து ஐநூறு ரூபாய்) ஆகும்.

உலகளாவிய gaming இண்டஸ்ட்ரியின் தற்போதைய சந்தை மதிப்பு 200 பில்லியன் டாலர் ஆகும், 2029-க்குள் இந்தியாவின் gaming இண்டஸ்ட்ரியின் சந்தை மதிப்பு 9 பில்லியன் டாலராக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டைச் சேர்ந்த கணினி அறிவியல் துறையிலுள்ள இறுதி ஆண்டு பயிலும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான கேம் டெவலப்பர், ஆர்டிஸ்ட் மற்றும் புரோகிராமர் திறன் பயிற்சி திட்டத்திற்காக உலகளாவிய நிறுவனமான கூகுள் மற்றும் யுனிட்டி நிறுவனத்தினருக்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.