Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்காவின் தடாலடி ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா - ரஷ்யா - சீனா இடையே ‘மெகா’ கூட்டணி? வெளியுறவுக் கொள்கையை மறுபரிசீலனை செய்யும் ஒன்றிய அரசு

புதுடெல்லி:அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 25% வரி விதிப்பு மிரட்டலால், இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை மறுபரிசீலனை செய்து, ரஷ்யா மற்றும் சீனாவுடன் இணைந்து புதிய உலகளாவிய கூட்டணியை உருவாக்கும் சூழல் உருவாகி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்காவுடன் தனது வர்த்தக மற்றும் தூதரக உறவுகளை இந்தியா வலுப்படுத்தி வருகிறது. கடந்த 2000ம் ஆண்டுக்குப் பிறகு, பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி போன்ற முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்கா முக்கிய பங்காளியாக உருவெடுத்தது. இந்த உறவு இருதரப்பு வர்த்தகத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல், சர்வதேச அரங்கில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தவும் உதவியது. ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தனது ‘அமெரிக்கா முதலில்’ என்ற கொள்கையை கையில் எடுத்துள்ளார். இந்தியா உட்பட பல நாடுகள் மீது 15% முதல் 41% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். ேமலும் ரஷ்யாவுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கப் போவதாகவும் அவர் விடுத்துள்ள அறிவிப்பு, வளர்ந்து வரும் பொருளாதார சக்தியான இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா மீதான 25% புதிய வரி விதிப்புக் கொள்கையால், தகவல் தொழில்நுட்பம், மருந்துப் பொருட்கள் மற்றும் ஜவுளித் தொழில் போன்ற துறையின் இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே வலுவான உறவு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தற்போதும் கூட ரஷ்யாவில் இருந்து 36% அளவிற்கு கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்கிறது. பனிப்போர் காலத்தில், சோவியத் யூனியன் இந்தியாவின் மிகப்பெரிய ராணுவ மற்றும் ராஜதந்திர நண்பனாக இருந்தது. குறிப்பாக, 1971ம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின்போது இந்தியாவுக்கு ரஷ்யா அளித்த ஆதரவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நட்புறவு, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கையின் அடித்தளமாக விளங்கியது.

சமீபத்திய ஆண்டுகளில், உலக வர்த்தகம் மற்றும் புவிசார் அரசியல் மாற்றங்களால் இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுடனான உறவுகளுக்கு முன்னுரிமை அளித்தது. இருப்பினும், ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவில் ஒருபோதும் பெரிய விரிசல் ஏற்படவில்லை. சுகோய்-30, டி-90 பீரங்கிகள் மற்றும் எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு போன்ற அதிநவீன ஆயுதங்களை இந்தியாவுக்கு ரஷ்யா வழங்கியுள்ளது. ஆனால் டிரம்ப்பின் தற்போதைய கொள்கைகளால், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யா, இந்தியாவுடன் புதிய பொருளாதார மற்றும் கூட்டணியை உருவாக்க ஆர்வம் காட்டக்கூடும் என்கின்றனர்.

அமெரிக்கா, ரஷ்யா உறவுகள் இப்படி இருக்கையில், இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவு எப்போதுமே சிக்கலானதாகவே இருந்து வருகிறது. எல்லைப் பிரச்னை, பொருளாதாரப் போட்டி மற்றும் பிராந்திய மோதல்கள் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளன. இருந்தபோதிலும், பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்ற மாநாடுகளில் இரு நாடுகளும் ஏற்கனவே இணைந்து செயல்பட்டு வருகின்றன. டிரம்ப்பின் வரி விதிப்புக் கொள்கை, இந்தியா மற்றும் சீனாவை பொதுவான ஒரே மேடையில் கொண்டு வருவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவுடன் வர்த்தகப் போரை எதிர்கொண்டுள்ள சீனா, இந்தியாவுடன் இணைந்து புதிய உலகளாவிய கூட்டணியை உருவாக்க விரும்பலாம். இதன் மூலம், மின்னணுவியல், மருந்துப் பொருட்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இரு நாடுகளும் தங்கள் நிலையை வலுப்படுத்த முடியும். இருப்பினும், எல்லைப் பிரச்னை மற்றும் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நம்பிக்கையின்மை ஆகியவை இந்த கூட்டணிக்கு பெரும் சவாலாகவே நீடிக்கிறது.

ஒருவேளை ரஷ்யா மற்றும் சீனாவுடன் இந்தியா புதிய கூட்டணியை உருவாக்கினால், அது உலக வர்த்தகத்தில் இந்தியாவை புதிய சக்தியாக நிலைநிறுத்த முடியும். ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவுடன், அமெரிக்காவின் பொருளாதார அழுத்தத்திலிருந்து தப்பிக்கவும், எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறையில் தற்சார்பு அடையவும் இந்தியாவுக்கு உதவியாக இருக்கும். மேலும், ஆசிய நாடுகளில் தலையிட்டுள்ள அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு பெரிய அடியாகவும் அமையும்.

இருப்பினும், இந்தக் கூட்டணியால் சில பாதகங்களும் உள்ளன. அமெரிக்காவுடனான உறவில் ஏற்படும் விரிசல், இந்தியாவுக்குப் பொருளாதார மற்றும் ராஜதந்திர ரீதியாகப் பெரும் இழப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும், சீனாவுடன் கூட்டணி அமைப்பது இந்தியாவின் பிராந்திய பாதுகாப்புக்கு புதிய சவால்களை உருவாக்கலாம். எனவே, இக்கட்டான இந்தச் சூழலில் ஒருவிதமான சமநிலையான அணுகுமுறையை இந்தியா கையாள வேண்டும் என்றும், ரஷ்யா மற்றும் சீனாவுடன் ஒத்துழைப்பை அதிகரிக்கும் அதே வேளையில், அமெரிக்காவுடனான உறவை முற்றிலுமாகப் புறக்கணிக்காமல் இருப்பது அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.