அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி இந்தியாவுக்கு 25 சதவீத வரி: நாளை முதல் அமலுக்கு வருகிறது; பல மாதங்களாக, பல மந்திரிகளுடன், பல கட்டங்களில் ஒன்றிய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
நியூயார்க்: இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படுவதாகவும், அது நாளை முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் கடந்த பல மாதங்களாக, பல அமைச்சர்களுடன், பல கட்டங்களாக ஒன்றிய அரசு மேற்கொண்ட வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் கூடுதல் வரி விதித்தார். மற்ற நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கும் அளவுக்கு அந்தந்த நாடுகளுக்கு பல்வேறு விகிதங்களில் பரஸ்பர வரி விதிக்கப்பட்டது.
இதில் இந்தியாவுக்கு 26 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். மேலும், இந்தியா தான் உலகிலேயே அதிகமான வரி விதிப்பதாக அவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இந்த கூடுதல் வரியை தவிர்க்க வேண்டுமெனில் அனைத்து நாடுகளும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள டிரம்ப் 90 நாள் காலஅவகாசம் வழங்கினார். அந்த கெடு கடந்த 9ம் தேதியுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கூடுதல் வரி விதிப்புகள் அமலுக்கு கொண்டு வரப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, வர்த்தக ஒப்பந்ததை் முடிக்காத ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு விதிக்கப்படும் கூடுதல் வரி குறித்த அறிவிப்புகளிலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இதற்கிடையே, அமெரிக்காவுடன் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியா கடந்த ஏப்ரல் மாதத்திலேயே பேச்சுவார்த்தைகளை தொடங்கியது. ஒன்றிய அமைச்சர்கள் பியூஸ்கோயல், ஜெய்சங்கர் மற்றும் வர்த்தக அமைச்சக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட இந்திய குழுவினர் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இதில், விவசாய பொருட்கள் உள்ளிட்ட விவகாரங்களில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. ஆனாலும் பேச்சுவார்த்தைகள் திட்டமிட்டபடி நடந்து வருவதால் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு முன்பாக இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி விடும் என ஒன்றிய வர்த்தக அமைச்சகம் கூறி வந்தது.
இதற்கிடையே, வர்த்தக ஒப்பந்தத்தை வைத்து மிரட்டி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை டிரம்ப் நிறுத்தியதாக சர்ச்சை எழுந்தது. இதைப் பற்றி டிரம்ப் தினந்தோறும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். டிரம்பின் இந்த பேச்சு குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்திலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினர். இதற்கு பிரதமர் மோடி உட்பட ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூட நேரடியாக பதிலளிக்கவில்லை.
இந்நிலையில், ஸ்காட்லாந்திலிருந்து வாஷிங்டனுக்குத் திரும்பும் வழியில் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் நேற்று முன்தினம் பேட்டி அளித்த அதிபர் டிரம்ப், ‘‘இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதியாகவில்லை. ஏனெனில் அமெரிக்க பொருட்களுக்கு உலகிலேயே இந்தியா தான் அதிகளவில் வரி விதிக்கிறது’’ என்றார். கூடுதல் வரிகளை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வருவதாக வெளியான செய்திகள் குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டதற்கு, ‘’20-25% வரியை ஏற்றுக் கொள்ள இந்தியா தயாராகி வருவதாகத்தான் நினைக்கிறேன்’’ என்றார்.
அதைத் தொடர்ந்து தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட டிரம்ப், ‘‘இந்தியா, அமெரிக்காவின் நீண்டகால நண்பன். எங்கள் இரு நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக வர்த்தக உறவு நீடிக்கிறது. ஆனாலும் நாங்கள் குறைந்த அளவிலேயே இந்தியாவுடன் வர்த்தகம் செய்கிறோம். எங்களுக்கு இடையே மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறை நிலவுகிறது. அதற்கு காரணம் இந்தியா, அமெரிக்கா மீது அதிகமான வரியை விதிக்கிறது. உலகிலேயே அதிகமான வரி விதிப்பது இந்தியா தான். அவர்கள் பல்வேறு வர்த்தக தடைகளை உருவாக்கி உள்ளனர். அதுமட்டுமின்றி, இந்தியா, ரஷ்யாவிடம் இருந்துதான் அதிகமான ஆயுதங்களை வாங்கி வருகிறது.
இப்போது, கச்சா எண்ணெயையும் ரஷ்யாவிடம் இருந்து அதிகமாக வாங்க ஆரம்பித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவை தனிமைப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் எடுக்கும் நிலையில், சீனாவைப் போல இந்தியாவும், ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. எனவே இவற்றின் காரணமாக, இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுகிறது. மேலும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அபராத வரியும் விதிக்கப்படும். இந்த வரி விதிப்புகள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்’’ என்றார். டிரம்பின் இந்த திடீர் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூடுதல் வரி விதிப்பால், இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
* மோடி நண்பர் என்றாலும் விட மாட்டேன்
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘‘பிரதமர் மோடி எனக்கு நல்ல நண்பர் என்பது உங்களுக்கே தெரியும். நான் கூறியதால் அவர்கள் பாகிஸ்தானுடனான போரை முடிவுக்கு கொண்டு வந்தனர். அது மிகச்சிறந்தது. வர்த்தகத்தை வைத்துதான் இந்தியா, பாகிஸ்தான் போரையே நிறுத்தினேன். எனவே இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் எதிர்பார்த்தபடி நிறைவேறும் என நினைக்கிறேன். இந்தியா நல்ல நண்பனாக இருந்தாலும் பல ஆண்டுகள் அமெரிக்காவுக்கு அதிகமான வரியை விதித்துள்ளது. நான் அதிபராக இருக்கும் போது அதை செய்ய முடியாது’’ என்றார்.
* அவகாசம் நீட்டிக்கப்படுமா?
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அடுத்தகட்டமாக 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க குழு ஆகஸ்ட் 25ம் தேதி இந்தியா வர இருப்பதாக வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார். எனவே, நாளைக்குள் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுமா என்பது சந்தேகமே. அதுமட்டுமின்றி, ஏற்கனவே போதிய அவகாசம் வழங்கப்பட்டு விட்டதால் இனியும் எந்த காலக்கெடும் நீட்டிக்கப்படாமல் நாளை முதல் கூடுதல் வரிகள் அமல்படுத்தப்படும் என அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
* வர்த்தக பற்றாக்குறை எவ்வளவு?
அமெரிக்கா, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இருந்து வருகிறது. கடந்த 2024-25ம் நிதியாண்டில் அமெரிக்காவுக்கு 88.02 பில்லியன் டாலர் (ரூ.7.6 லட்சம் கோடி) மதிப்பில் ஏற்றுமதி செய்த நிலையில், 43.01 பில்லியன் டாலர் (ரூ.3.7 லட்சம் கோடி) பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. மொத்த வர்த்தகம் 130.3 பில்லியன் டாலர் (ரூ.11.3 லட்சம் கோடி). இதில், வர்த்தக பற்றாக்குறை 45.01 பில்லியன் டாலராக (ரூ. 3.9 லட்சம் கோடி) உள்ளது. ரஷ்யாவுக்கு வெறும் 4.26 பில்லியன் டாலர் (ரூ.36.6 ஆயிரம் கோடி) மட்டுமே ஏற்றுமதி செய்யும் இந்தியா, 61.43 பில்லியன் டாலர் (ரூ.5.28 லட்சம் கோடி) இறக்குமதி செய்கிறது.
* பியூஸ் கோயலுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 சதவீத வரியை அறிவித்த நிலையில், உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயலை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த விவகாரத்தில் இந்தியாவின் திட்டம் குறித்து ஒன்றிய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
* விரைவில் ஒப்பந்தம் ஒன்றிய அரசு நம்பிக்கை
ஒன்றிய அரசு தரப்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்ற அதிபர் டிரம்பின் அறிவிப்பின் தாக்கங்களை ஆய்வு செய்து வருகிறோம். கடந்த சில மாதங்களாக இந்தியாவும், அமெரிக்காவும் நியாயமான, சமநிலையான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நோக்கமும் விரைவில் எட்டப்படும் என நம்பிக்கை கொண்டுள்ளோம். விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில்களின் நலனைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. நமது தேசிய நலனைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்’ என கூறப்பட்டுள்ளது.