Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் தேர்தல்; கருத்துக்கணிப்பில் டிரம்பை முந்தும் கமலா ஹாரிஸ்: இறுதிகட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள் தீவிரம்

வாஷிங்டன்: நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் டிரம்பை காட்டிலும் கமலா ஹாரிஸ் முன்னிலை வகிக்கிறார். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை மறுநாள் (நவ. 5 - இந்திய நேரப்படி நவ. 6) நடைபெறுகிறது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும் (60), குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் (78) போட்டியிடுகின்றனர். அதேபோல் பிற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். தற்போது டிரம்பும், கமலாவும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக தேசிய அளவிலும் மாகாண அளவிலும் கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. தேசிய அளவில் சில கருத்துக்கணிப்புகள் கமலாவுக்கு ஆதரவாகவும், வேறு சில கருத்துக்கணிப்புகள் டிரம்புக்கு ஆதரவாகவும் உள்ளன.

எனினும் பெரும் பாலான கணிப்புகளில் இருவருக்கும் இடையிலான வாக்கு சதவீதத்தின் இடைவெளி ஒரு சதவீதமாக உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நாளுக்கு முன்பாகவே பொதுமக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய முடியும். இதன்படி தேர்தலுக்கு முன்பாக இதுவரை 6.5 கோடி பேர் தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கோ, குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்புக்கோ வாக்காளர்கள் நேரடியாக வாக்களிக்கமாட்டார்கள். அதற்குப் பதிலாக ‘எலக்டோரல் காலேஜ்’ (வாக்காளர் குழு) உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள்.

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளரே, அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும். வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு அன்றிரவு 50 மாகாணங்களிலும் வாக்குகள் எண்ணப்படும். பெரும்பாலும் அன்றிரவே அமெரிக்காவின் புதிய அதிபர் யார்? என்பது தெரியவரும். கடந்த 2020ம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடித்தது. இதனால் சில நாட்களுக்குப் பிறகே ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

தற்போதைய தேர்தலில் கமலா ஹாரிஸ் - டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுவதால், இந்த முறையும் அதிபர் தேர்தலில் இழுபறி ஏற்படக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு இரண்டு நாட்களே உள்ளதால், இன்று வட கரோலினா மற்றும் வர்ஜீனியாவில் டிரம்ப் பிரசாரம் மேற்கொண்டார். சார்லோட்டில் கமலா ஹாரிஸ் பிரசாரம் மேற்கொண்டார். சர்வதேச அளவில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்பா? கமலாவா? என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன.

சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, புகழ்பெற்ற ‘டெஸ் மொயின்ஸ் ரிஜிஸ்டர்’ செய்தித்தாள் வெளியிட்ட அறிக்கையின்படி கமலா ஹாரிசுக்கு 47% ஆதரவும், டிரம்புக்கு 44% ஆதரவும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பை நடத்திய செல்சர் அண்ட் கோ நிறுவனத்தின் தலைவர் ஜே.ஆன் செல்சர் கூறுகையில், ‘இருவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது பெரும் சவாலாக உள்ளது. இன்றைய நிலையில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார். ஆனால் கடந்த செப்டம்பரில் நடத்திய வாக்கெடுப்பில் கமலா ஹாரிஸை விட நான்கு புள்ளிகள் டிரம்ப் முன்னிலை வகித்தார்’ என்றார்.