Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசு நிறைவேற்றிய 3 கிரிமினல் சட்டம் மக்களை குழப்புகிறது: 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவு

சென்னை: ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள 3 புதிய கிரிமினல் சட்டங்களை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசு பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன என்றும் இதுதொடர்பாக சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளது. இதொடர்பாக 4 வாரங்களுக்குள் ஒன்றிய அரசு பதில் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம், இந்திய சாட்சிகள் சட்டத்துக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்‌ஷ்ய அதினியம் என்ற பெயர்களில் புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த சட்டங்களை அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவித்து, அவற்றை ரத்து செய்யக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், நாடாளுமன்றத்துக்குள் கண்ணீர் புகை குண்டு வீசிய சம்பவத்தை கண்டித்ததால், இரு சபைகளில் இருந்தும் 150 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், எந்த விவாதமும் இல்லாமல் இந்த சட்டங்கள் அவசர கதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநில அரசுகளின் ஆலோசனைகளைப் பெறாமல், சில பிரிவுகளை மட்டும் மாற்றம் செய்து, சட்டங்களை சமஸ்கிருதமயமாக்கி உள்ளனர். இது பல தரப்பினருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில், அரசு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை குற்றமாக்கியுள்ளது. குற்றங்களுக்கு தண்டனைகளை அதிகரித்துள்ளது. ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் எனக் கூறியுள்ளதன் மூலம், தண்டனை குறைப்பு வழங்கும் குடியரசு தலைவர், ஆளுநரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளது. பாரதிய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா சட்டத்தில், காவல் துறையினருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. கொலை, ஆசிட் வீச்சு வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களுக்கு கைவிலங்கு பூட்டுவதன் மூலம் தனிநபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அரசியலமைப்பு சட்டப்படி ஆங்கிலத்தில் மட்டுமே சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், சமஸ்கிருதத்தில் சட்டங்களை நிறைவேற்றியது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.

புகார்தாரர், எதிர்தரப்பினர் என இரு தரப்பினருக்கும் எதிரானவையாக உள்ளது என்று வாதிட்டார். அப்போது, இந்த வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய மத்திய அரசுத்தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதையடுத்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளதாகவும், சிபிசி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த போதும் இதேபோல எதிர்ப்பு இருந்தது. இது தொடர்பாக சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுடன் பட்டியலிட உத்தரவிட்டனர்.