தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 30ல் தொடக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 30ல் தொடக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15% எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மா், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) இணையவழியே நடத்தி வருகிறது. இந்த நிலையில், நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் 21ம் தேதி தொடங்குகிறது. மாநில கலந்தாய்வைப் பொருத்தவரை தோராயமாக ஜூலை 30ம் தேதி நடத்த வேண்டும் என்று மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 30ல் தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; மருத்துவ படிப்பில் சேர 72,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சான்றிதழ்களை இணைக்க தவறிய மாணவர்களுக்கு 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் ஜூன் 6 முதல் 29ம் தேதி வரை பெறப்பட்டன. போலி ஆவணங்களை அளித்த 20 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 3 ஆண்டு மருத்துவப்படிப்பில் சேர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிறப்பிடச் சான்று, சாதிச் சான்று, என்.ஆர்.ஐ. சான்றிதழ் போன்ற போலியான ஆவணங்கள் கொடுத்த 20 மாணவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கான இறுதி பட்டியல் ஜூலை 25ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.